அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அடக்கத் திருப்பலி அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அடக்கத் திருப்பலி 

தந்தை ஸ்டான் சுவாமி – தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை

மானுட மாண்பைக் காக்கின்ற வகையில் அரை நூற்றாண்டு உழைத்த ஒரு துறவியை, சமுதாயத்தில் கலகம் விளைவிப்பவராகச் சித்தரித்து, நாளும் துரத்திவந்த அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் - பேராயர் பாப்புசாமி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'தந்தை ஸ்டான் சுவாமி அவர்களின் பணி வாழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம்' என்ற தலைப்பில், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், ஜூலை 6, இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளாக ஒரு அருள்பணியாளராகவும், குறிப்பாக, பழங்குடியினரரின் வாழ்வாதார உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் பணியிலும் தன்னையே அர்பணித்துக்கொண்ட தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் வேதசாட்சியாய் விதைக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு தமிழக ஆயர் பேரவை தன் வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது என்றும் பேராயர் பாப்புசாமி அவர்களின் அறிக்கை ஆரம்பமாகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பழங்குடியினர் விடுதலைக்காகவும் வாழ்ந்து மடிந்த அருள்பணி ஸ்டான் அவர்களின் அர்ப்பண வாழ்வையும், அவர் பின்பற்றிய மதிப்பீடுகளையும், பேராயர் பாப்புசாமி அவர்கள் இவ்வறிக்கையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மீது பொய்யான அவதூறுகளை சுமத்தி, அவரைச் சிறைப்படுத்திய அரசின் போக்கை, பேராயரின் அறிக்கை, வன்மையாக கண்டனம் செய்துள்ளது.

கிறித்தவத் துறவியொருவர் தன் பணிவாழ்வில் காட்டிய நேர்மையை, நீதியின்பால் காட்டிய உறுதியை, மானுட மாண்பைக் காக்கின்றவகையில் அரை நூற்றாண்டு உழைத்த ஒரு துறவியை, சமுதாயத்தில் கலகம் விளைவிப்பவராகச் சித்தரித்து, நாளும் துரத்திவந்த அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று, பேராயர் பாப்புசாமி அவர்கள், இவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் வாழ்ந்த ஒரு துறவியை மாபெரும் குற்றவாளியைப்போல் சிறைபிடித்து, உடல்நலம் குன்றிய நிலையிலும் அவர்தம் முதுமைக்குக்கூட கருணை காட்டாது, கடுமையாக நடந்துகொண்ட அரசு அதிகாரிகளையும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற அரசு நிறுவனங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று, தமிழக ஆயர் பேரவையின் தலைவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

மானுடத்தைப் போற்றும் வகையில் தளராது செயல்பட்ட இம்மனிதருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், இக்கொடுமைகளால் இவர் சந்தித்த மரணத்திற்கும், அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை, பேராயரின் அறிக்கை வலியுறுத்துகிறது.

குடியரசின் விழுமியங்களோடு நடத்தப்படும் ஆட்சியை மதிக்கத்தெரிந்தவர்கள் நாங்கள் என்றும், அதேவேளையில், மனிதத்தைக் கடந்த சட்டங்களை ஏற்கமாட்டோம் என்றும் பேராயர் பாப்புசாமி அவர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இனி வரும் காலங்களில், சனநாயக அரசும், அரசின் நிறுவனங்களும் அரசு நீதியைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், இறையடி சேர்ந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடையவேண்டும் என்றும் இவ்வறிக்கையின் இறுதியில் விண்ணப்பங்கள் எழுந்துள்ளன.

சனநாயக நாட்டில் மனித உரிமைகளைக் காக்க வாழ்ந்த ஒருவருக்கு சனநாயக அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமானால், ஸ்டான் சுவாமியைப் பின்பற்றி, இனி எத்தனையோ சுவாமிகள் தோன்றி, மக்கள் விடுதலைப் பயணத்தில் பங்கேற்பது உறுதி, என்ற உறுதி மொழியுடன், தமிழக ஆயர் பேரவையின் சார்பாக, பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை நிறைவடைகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2021, 15:10