பிரான்சின் L'Oeuvre d'Orient என்ற பிறரன்பு அமைப்பின் இலச்சனை பிரான்சின் L'Oeuvre d'Orient என்ற பிறரன்பு அமைப்பின் இலச்சனை 

லெபனோன் சிறார்களின் கல்விக்கென திருஅவை நிதியுதவி

2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் லெபனோன் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உருவாகியதிலிருந்து, பள்ளிப்படிப்பை நிறுத்தும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த 160 ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கு நாடுகளின் கிறிஸ்தவ  திருஅவைகளுக்கு உதவிவரும் பிரான்சின் L'Oeuvre d'Orient என்ற பிறரன்பு அமைப்பு, லெபனோனின் 355 கிறிஸ்தவ பள்ளிகளுக்கும், ஆறு கத்தோலிக்க பல்கலைக்கழகங்களுக்கும் உதவும் வண்ணம், 36 இலட்சம் யூரோக்கள் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

2021-2022 கல்வியாண்டிற்கு இவ்வுதவிகள் வழங்கப்படும் என அறிவித்த இப்பிறரன்பு அமைப்பின் தலைவர், ஆயர் Pascal Gollnish அவர்கள், பல்வேறுச் சூழல்களால் கல்வியைத் தொடரமுடியாமல் இருக்கும், ஏறக்குறைய 1,20,000 சிறார், மீண்டும் கல்வியைத் தொடர, இத்தொகை, உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் லெபனோன் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உருவாகியதிலிருந்து, பள்ளிப்படிப்பை நிறுத்தும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உரைக்கும் அந்நாட்டு திருஅவைத் தலைவர்கள், ஏழை மக்களின் பொருளாதார வலிலுவின்மை, ஊதியமின்மையால் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஆகியவை ஏழைச் சிறார்களையே அதிக அளவில் பாதித்துள்ளதாக தெரிவித்தனர்.

2020ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, வீட்டிலேயே முடக்கப்பட்ட 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், தற்போது, அரசியல், நல ஆதரவு, சமூக, மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக, கல்விக்கூடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்லாத நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளனர் லெபனோன் திருஅவை அதிகாரிகள். 

இதற்கிடையே, லெபனோனின் மிகவும் வறியப் பகுதிகளில் இயங்கும், கல்விக்கட்டணம் வெகு அளவு குறைந்த 90 பள்ளிகளுக்கு திருப்பீடம் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக, லெபனோன் நாட்டிற்கான திருப்பீடத் தூதர், பேராயர் Josef Spiteri அவர்கள் அறிவித்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2021, 14:01