நேபாள தலைநகர் காத்மண்டுவில் கொரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் கூட்டம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் கொரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் கூட்டம் 

நேபாள மருத்துவமனைகளுக்கு காரித்தாசின் உதவி

நேபாளத்தில் கோவிட் பெருந்தொற்று பரவத் துவங்கியதிலிருந்து, அந்நாட்டின் 23 மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் துவக்கி, செயல்படுத்திவருகின்றது, காரித்தாஸ் நிறுவனம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான உதவிகளை அமெரிக்க ஆயர்களின் CRS உதவி அமைப்பின் துணையுடன் ஆற்றிவருகிறது, நேபாள காரித்தாஸ் நிறுவனம்.

நேபாளத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 20 மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ கருவிகளையும், உயிர் காக்கும் மருந்துகளையும் ஜூலை, ஆகஸ்ட், மற்றும் செப்டம்பர் மாதங்களில் வழங்க உள்ளதாக, அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நேபாளத்தில் கோவிட் பெருந்தொற்று பரவத் துவங்கியதிலிருந்து, நேபாளத்தின் 23 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென நிவாரணப் பணிகளைத் துவக்கி, செயல்படுத்திவருகின்றது, காரித்தாஸ் நிறுவனம்.

நேபாளத்தின் நகர்களிலும் கிராமங்களிலும் 150 சிறு மையங்களை அமைத்து, மக்கள் தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க உதவுவதுடன், கோவிட் பெருந்தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள உதவும் உபகரணங்கள் அடங்கிய பத்தாயிரம் பொட்டலம், 7000 குடும்பங்களுக்கு உணவு விநியோகம், 24,000 சிறு விவசாயிகளுக்கு உதவி ஆகியவைகளுடன், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரிடையே விழிப்புணர்வுத் திட்டங்களையும் செயலாற்றியுள்ளது.

நேபாளத்தின் மொத்த மக்கள்தொகையில் 81 விழுக்காட்டினர் இந்துமதத்தைப் பின்பற்றுபவர்கள். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 9 விழுக்காட்டினர் புத்தமதத்தினராகவும், 4.4 விழுக்காட்டினர் இஸ்லாமியராகவும், 1.4 விழுக்காட்டினர் கிறிஸ்தவராகவும் உள்ளனர். நேபாளத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, பத்தாயிரத்திற்கு சிறிது அதிகமாக உள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2021, 14:29