குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உறவினர்களைச் சந்திக்கும் கர்தினால் மால்கம் இரஞ்சித் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் உறவினர்களைச் சந்திக்கும் கர்தினால் மால்கம் இரஞ்சித்  

தாக்குதல்கள் பற்றிய உண்மைகள், விரைவில் வெளிவரவேண்டும்

இலங்கை ஆலயங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்குப்பின் 26 மாதங்கள் கழிந்தபின்னரும், இந்த தாக்குதல்கள் குறித்து அரசுத்தரப்பில் இதுவரை, தெளிவான, உண்மையான விவரங்கள் மக்களை அடையவில்லை – கர்தினால் இரஞ்சித்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு, ஏப்ரல் 21ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவன்று இலங்கையின் பல்வேறு ஆலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்த நேர்மையான, தெளிவான விவரங்களை மக்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று, கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், அரசுத்தலைவர் Gotabaya Rajapaksa அவர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.

இலங்கை ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பாக, ஜூலை 12, இத்திங்களன்று எழுதப்பட்ட இம்மடலில், கர்தினால் இரஞ்சித், மற்றும் ஆயர்கள், அருள்பணியாளர்கள் என, 30 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் குறித்து, இரண்டு ஆண்டுகள் சென்றபின்னும், எவ்வித தெளிவான, வெளிப்படையான விவரங்களை வெளியிடாமல், இலங்கை அரசு, 20க்கும் மேற்பட்ட வழக்குகளை நீதிமன்றங்களில் நடத்திவருவதால் மக்கள் ஏமாறப்போவதில்லை என்று கர்தினால் இரஞ்சித் அவர்கள் தன் மடலில் கூறியுள்ளார்.

அரசுத்தலைவருக்கு எழுதியுள்ள மடலை, ஜூலை 13, இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், உண்மையையும், நீதியையும் நிலைநாட்ட அரசு தவறினால், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வேறு வழிகளில் போராட வேண்டியிருக்கும் என்று வெளிப்படையாகக் கூறினார்.

269 பேரின் மரணத்திற்கும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கும் காரணமான இந்த தாக்குதல்களைக் குறித்து, தங்களுக்கு தெரிந்த தகவல்களை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த அந்த தாக்குதல்களைக் குறித்து, அரசுக்குத் தெரிந்த விவரங்களை வழங்க தொடர்ந்து தயக்கம் காட்டுவது, பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது என்று கூறினார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற இந்தத் தாக்குதல்களுக்குப்பின் 26 மாதங்கள் கழிந்தபின்னரும், இந்த தாக்குதல்கள் குறித்து அரசுத்தரப்பில் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு, 5 மாதங்கள் கழிந்தபின்னரும், இதுவரை, தெளிவான, உண்மையான விவரங்கள் மக்களை அடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், உண்மையும், நீதியும் நிலைநிறுத்தப்படும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2021, 14:04