மியான்மார் நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மியான்மார் நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை 

ஐம்புலன் உணர்வுகளால் துன்புறுவோரை நோக்குங்கள்

ஆறுதல், குணப்படுத்தல், அமைதி, நீதி, வளமை ஆகிய ஐந்து அப்பங்களையும், பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவையறிதல், தொட்டுணர்தல் ஆகிய ஐந்து புலணுணர்வுகளையும் இறைவன் நமக்கு அருள்வாராக – கர்தினால் போ

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

கோவிட்-19 பெருந்தொற்று, உள்நாட்டுக் கலவரம், மற்றும், பொருளாதாரச் சரிவு ஆகிய மூன்று பேரிடர்களின் பிடியில் துன்புறும் மியான்மார் நாட்டில், கத்தோலிக்கர், தங்களின் ஐம்புலன்களைக் கொண்டு, துன்புறும் அயலவரை நோக்குமாறு, கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

இயேசு ஐந்து அப்பங்கள் பலுகச்செய்த புதுமையை மையப்படுத்தி மறையுரையாற்றிய, யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள், இப்புதுமையையும், மியான்மாரில் நிலவும் துயர்நிறைந்த சூழலையும் ஒப்புமைப்படுத்தி, தன் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.

மியான்மார் தற்போது எதிர்கொள்ளும் மூன்று விதமான கடுமையான நெருக்கடிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், ஆக்சிஜன் மற்றும், மருந்துகள் பற்றாக்குறை, மற்றும், போரால் நூற்றுக்கணக்கான மரணங்களும், பசியும், வேலைவாய்ப்பின்மையும், புலம்பெயர்வுகளும் இடம்பெற்றுவருகின்றன என்று கூறினார்.

பசியால் களைத்திருந்த மக்கள் கூட்டத்திற்கு, ஐந்து அப்பங்களைக் கொண்டு இயேசு  உணவளித்தபோது அவரிடமிருந்து வெளியான நல்லுணர்வுகள், நம்மிடையே உருவாகவேண்டும் என்று, கர்தினால் போ அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மியான்மார் நாடு, இயற்கை வளங்களாலும், அருள்மிக்க மனிதர்களாலும் அதிகமாகவே ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது, கடவுளின் ஐந்து அப்பங்களாகிய இவையே, அந்நாட்டின் 5 கோடியே 55 இலட்சம் மக்களுக்கு உணவளிக்கப் போதுமானவை என்றுரைத்த கர்தினால் போ அவர்கள், கடவுளின் இக்கொடைகள், நம் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன என்று கவலை தெரிவித்தார்.

மியான்மாரில் 34 இலட்சம் மக்கள் கடும் பசிக்கொடுமையை எதிர்நோக்கக்கூடும் என்று, ஐ.நா.வின் உலக உணவுதிட்ட அமைப்பு (WFP) எச்சரிக்கை விடுத்துள்ளவேளை, இயேசு போன்று, நாமும் துன்புறும் மக்கள்மீது இரக்கம் காட்டப்படவேண்டியது முக்கியம் என்றும், தங்களின் உறவுகளை அடக்கம்செய்வதற்காக கல்லறைத்தோட்டத்தில் கண்ணீரோடு வரிசையில் நிற்கும் மக்களையும், மனத்துயரங்களோடு இருக்கும் புலம்பெயர்ந்த மக்களையும் காணமுடிகின்றது என்றும், சலேசிய சபையைச் சார்ந்த கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.

ஆறுதல், குணப்படுத்தல், அமைதி, நீதி, வளமை ஆகிய ஐந்து அப்பங்களையும், பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவையறிதல், தொட்டுணர்தல் ஆகிய ஐந்து புலணுணர்வுகளையும் இறைவன் நமக்குத் தந்தருளுமாறு மன்றாடுவோம் எனவும், கர்தினால் போ அவர்கள் தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

மியான்மாரில் இராணுவத்திற்கும், ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கும் இடையே இடம்பெறும் போரால் ஏறத்தாழ 2,11,000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர். ஜூலை 25, இஞ்ஞாயிறு நிலவரப்படி, அந்நாட்டில் 77 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கோவிட்-19ஆல் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், அதனால் 7,111 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2021, 15:03