அருள்பணி ஸ்டான் சுவாமி அருள்பணி ஸ்டான் சுவாமி  

அருள்பணி ஸ்டான், வறியோர் நடுவே வாழ்ந்த இன்றைய புனிதர்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், அநீதிகள் பெருகியிருக்கும் தெருக்களிலும், மலை முகடுகளிலும், தன் பலிபீடத்தை நிறுவி, அருள்பணித்துவத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தார் - கர்தினால் சார்ல்ஸ் மாங் போ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், அநீதிகள் பெருகியிருக்கும் தெருக்களிலும், மலை முகடுகளிலும், தன் பலிபீடத்தை நிறுவி, அருள்பணித்துவத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தார் என்று ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 5ம் தேதி இறையடி சேர்ந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களின் அடக்கத் திருப்பலி, மும்பையில் நடைபெற்ற நாளான ஜூலை 6ம் தேதி, கர்தினால் போ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அருள்பணி ஸ்டான் அவர்கள், பழங்குடியினரிடையே, மனிதமாண்பு, மற்றும், நீதி, ஆகிய நற்செய்தியை பகிர்ந்துகொண்டார் என்று கூறினார்.

பன்னாட்டு வர்த்தகப் பேராசையினால் ஒவ்வொரு நாளும் சிலுவையில் அறையப்பட்ட அப்பாவி பழங்குடியினரிடையே உழைத்துவந்த அருள்பணி ஸ்டான் அவர்கள், இறுதியில் தானே சிலுவையில் அறையப்பட்டு, கிறிஸ்துவின் உண்மையான சீடராக உயிர்துறந்தார் என்று, கர்தினால் போ அவர்கள், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

கலகம் விளைவிக்கிறார் என்று பிரித்தானிய அரசால் தவறாக குற்றம் சுமத்தப்பட்ட காந்தியடிகளுடன், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை ஒப்புமைப்படுத்தி பேசியுள்ள கர்தினால் போ அவர்கள், காந்தியடிகளின் வன்முறையற்ற அகிம்சை வழியைப் பின்பற்றிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தியாவின் வறியோர் நடுவே வாழ்ந்த இன்றைய புனிதர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசியாவின் நுரையீரல்களாக உள்ள பகுதிகளைக் காப்பதற்கு, பழங்குடியின மக்கள் உழைத்துவருகின்றனர் என்பதை, தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், அரசின் துணையோடு, பன்னாட்டு நிறுவனங்கள், இந்த நுரையீரல்களை மூச்சடைக்கச் செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்கும் முக்கிய பணியில் அருள்பணி ஸ்டான் அவர்கள் ஈடுபட்டிருந்தார் என்று கூறினார்.

இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், தடையின்றி பரவிவரும் அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ள அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் முன்னெடுத்த நீதிப்பணி, ஒருபோதும் தீமைக்கு அடிபணியாது என்று, கர்தினால் போ அவர்கள், தன் அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்தியாவின் பழங்குடியினரோடு இணைந்து, அருளபணி ஸ்டான் அவர்களின் மறைவுக்கு வருந்தும் இவ்வேளையில், அவர் நிறுவவிழைந்த நீதியான சமுதாயத்திற்காக உழைக்க நாம் அனைவரும் நம்மையே அர்ப்பணிப்போம் என்ற விண்ணப்பத்துடன், மியான்மார் நாட்டின் கர்தினால் போ அவர்கள் தன் அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2021, 14:55