அருள்பணி ஸ்டான் சுவாமியின் இறப்பையொட்டி இரங்கல் அருள்பணி ஸ்டான் சுவாமியின் இறப்பையொட்டி இரங்கல் 

தந்தை ஸ்டான் சுவாமி, ஒடுக்கப்பட்டோரின் மனசாட்சி

UAPA சட்டங்களைத் திரும்பப் பெறவும், தேசிய புலனாய்வு முகமையைக் கலைக்கவும் உழைப்போருடன் நம் தோழமையை வெளிப்படுத்திப் போராடுவதன் வழியாகவே, தந்தை ஸ்டான் அவர்களுக்கு உண்மையான அஞ்சலியை நம்மால் செலுத்தமுடியும் – ஆயர் நசரேன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் இறப்பு, இந்திய ஒன்றிய அரசின் நிறுவனங்களான, தேசிய புலனாய்வு முகமை, சிறை நிர்வாகம், நீதிமன்றம் என, எல்லாம் இணைந்து நிகழ்த்திய படுகொலை என்று, தமிழக ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழுத் தலைவர், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அவர்கள் கூறியுள்ளார்.

தந்தை ஸ்டான் அவர்களின் இறப்பைமுன்னிட்டு, மனித உரிமைக்காப்பாளர்கள், மற்றும், அரசியல் தலைவர்கள் என, பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும், எழுந்துள்ள கண்டனங்களால், இந்திய ஒன்றிய அரசு தலைகுனிந்து நிற்கிறது எனவும், ஆயர் நசரேன் அவர்கள் கூறியுள்ளார்.    

தந்தை ஸ்டான் சுவாமியின் இறப்பையொட்டி, “அரசு படுகொலையை எதிர்த்து முழக்கம் செய்வோம்” என்ற தலைப்பில், கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள  ஆயர் நசரேன் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்

தந்தை ஸ்டான் அவர்களின் இறப்பையொட்டி, ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களுக்கும், இயேசு சபையினருக்கும், தந்தையின் உறவினர்களுக்கும், தமிழக ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழுத் தலைவர் என்ற முறையில், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், ஆயர் நசரேன் அவர்கள் கூறியுள்ளார்.

UAPA சட்டத்தால் கைதுசெய்யப்பட்டு நடைபிணமாகியுள்ள கவிஞர் வரவர ராவ் அவர்கள் வெளியிட்ட, “குற்றம் அரசாளும்போதும், மக்களைக் குற்றவாளியாக்கி வேட்டையாடும்போதும், குரலிருந்தும் மவுனம் சாதிக்கும் ஒவ்வொருவரும் குற்றவாளிதான்” என்ற, கூற்றைக் குறிப்பிட்டுள்ள ஆயர் நசரேன் அவர்கள், இக்கூற்று, நம் அனைவருடைய மனச்சான்றை ஊடுருவட்டும் என்று கூறியுள்ளார்.    

UAPA சட்டங்களைத் திரும்பப் பெறவும், தேசிய புலனாய்வு முகமையைக் கலைக்கவும் உழைப்போருடன் நம் தோழமையை வெளிப்படுத்திப் போராடுவதன் வழியாகவே, ஒடுக்கப்பட்டோரின் மனசாட்சியான தந்தை ஸ்டான் அவர்களுக்கு உண்மையான அஞ்சலியை நம்மால் செலுத்த முடியும் என்றும் ஆயரின் அறிக்கை கூறுகிறது.

திருச்சி மாவட்டம், விரகாலூரில் பிறந்த அருள்பணி ஸ்டான் அவர்கள், 1990ம் ஆண்டு முதல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக உழைத்து வந்தார். அரசின் வளர்ச்சித் திட்டங்களாலும், பெரும்தொழில் நிறுவனங்களின் அதீத பேராசையாலும், காடுகள் அழிக்கப்பட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாலும், பழங்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தந்தை ஸ்டான் அவர்கள், அம்மக்களது அரசியல் சட்ட உரிமை, நிலவுரிமை, மற்றும், மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டார். பழங்குடி மக்களில் ஏராளமானோர் மாவோயிஸ்ட்கள் என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர்கள்மீது போடப்பட்டிருந்த பொய் வழக்குகளுக்கு எதிராக, இவர் சட்டப்போராட்டம் நடத்தினார் என்று, கோட்டாறு ஆயர் நசரேன் அவர்களது அறிக்கை கூறுகிறது. (Ind.Sec./Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2021, 15:32