அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அடக்கத் திருப்பலி அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அடக்கத் திருப்பலி 

குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசியல் தலைவர்களின் மடல்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம் எங்களுக்குள் உருவாக்கியுள்ள பெரும் துரயத்தையும், இவ்வாறு நடந்தது குறித்து ஏற்பட்ட கோபத்தையும், உங்களுக்குத் தெரிவிக்கிறோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம் எங்களுக்குள் உருவாக்கியுள்ள பெரும் துரயத்தையும், இவ்வாறு நடந்தது குறித்து ஏற்பட்ட கோபத்தையும், உங்களுக்குத் தெரிவிக்கிறோம் என்று, இந்திய அரசியல் தலைவர்கள் சிலர், இந்தியக் குடியரசுத் தலைவர் இராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு, ஜூலை 6 இச்செவ்வாயன்று மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆகியோர் உட்பட, 10 அரசியல் தலைவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இம்மடலில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு நிகழ்ந்த அநீதிகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

பீமா கொரேகான் வன்முறையில் தொடர்புகொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்திய மக்கள் மீது மத்திய அரசால் திணிக்கப்பட்டுள்ள UAPA என்ற அநீதியானத் தடைச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றம் எதுவும், கடந்த 9 மாதங்களாக நிரூபிக்கப்படவில்லை என்பதை, தலைவர்கள் இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதிர்ந்த வயது, நரம்புத்தளர்ச்சி நோய் என்ற எவ்வித கருணையும் காட்டாததால், அவர் விண்ணப்பித்திருந்த உறுஞ்சு குழல் பொருத்திய கிண்ணம், குளிருக்குப் பாதுகாப்பான உடைகள் என்று எதையும் சிறை அதிகாரிகள் அவருக்கு உடனடியாகக் வழங்கவில்லை என்பதை, இத்தலைவர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அடைக்கப்பட்டிருந்த டலோஜா சிறையில் கோவிட் பெருந்தொற்று பரவியிருந்ததையும் நீதிமன்றம் தன் கவனத்தில் கொள்ளவில்லை என்பதால், அருள்பணி ஸ்டான் அவர்கள் இந்த பெருந்தொற்றால் பாதிக்கபப்ட்டு, உடல் நலம் மிகவும் குன்றிய நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் இம்மடலில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பான இந்த தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ள தலைவர்கள், அருள்பணி ஸ்டான் அவர்கள் மீது தவறான குற்றங்களைச் சுமத்தியவர்கள், அவரது தொடர் சிறை தண்டனையை அனுமதித்தவர்கள் அனைவர் மீதும், தற்போதைய 'உங்கள் அரசு' நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தலைவர்கள், குடியரசுத் தலைவரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், பழிவாங்கும் ஒரே நோக்கத்துடன் புனையப்பட்டுள்ள பீமா கொரேகான் வழக்கு, அரசியல் நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட வழக்கு என்பதை குடியரசுத் தலைவர் உணர்ந்து, இந்த வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்டு சிறையில் வாடும் ஏனையோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று, பத்து தலைவர்களும் இணைந்து விண்ணப்பித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2021, 15:21