உலக இளையோர் நாள் சிலுவையுடன் அங்கோலாவில் திருப்பயணம் உலக இளையோர் நாள் சிலுவையுடன் அங்கோலாவில் திருப்பயணம் 

அங்கோலாவில் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முன்தயாரிப்பு

அங்கோலா திருஅவை, 2021ம் ஆண்டு அக்டோபர் முதல், 2023ம் ஆண்டு அக்டோபர் வரை, உலக ஆயர்கள் மாமன்றப் பயணத்தை உயிர்த்துடிப்போடு மேற்கொள்ளும் - அருள்பணி Pestana

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முன்னேற்பாடாக, அம்மாமன்றத்தில் அனைத்துக் கத்தோலிக்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில், பல்வேறு மறைமாவட்டங்களில், தயாரிப்புப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முன்தயாரிப்பாக, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் மறைமாவட்ட அளவில் ஆரம்பிக்கவிருக்கும் பேரவைகளில், பங்குத்தளங்கள், இயக்கங்கள், பக்த சபைகள், அன்பியங்கள் போன்ற அனைத்தும் உற்சாகத்தோடு கலந்துகொள்வதற்கென்று, பயிலரங்கங்கள், மற்றும், தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

ஆப்ரிக்க நாடான அங்கோலாவின் Viana மறைமாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ள இப்பணிகள் குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்துள்ள, அம்மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்பணி Domingo Pestana அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலரிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றவுடனேயே, தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறினார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தில், உலகளாவியத் திருஅவை முழுவதும் பங்கெடுக்கவேண்டும் என்று திருத்தந்தை பரிந்துரைத்துள்ள புதிய சவால்கள் பற்றி, அனைத்து மறைப்பணியாளர்கள் மற்றும், அருள்பணியாளர்களோடு, கூட்டங்கள் நடத்தி, கருத்தறிதல் நடைபெற்றது எனவும், அருள்பணி Pestana அவர்கள் விளக்கினார்.

இவர்கள், அன்பியங்கள், பக்தசபைகள், இயக்கங்கள் போன்ற அனைத்தின் தலைவர்களைச் சந்தித்து, உலக ஆயர்கள் மாமன்றப் பயணம் குறித்து எடுத்துரைத்து, அதில் ஆர்வத்தோடு பங்குகொள்ள ஊக்கப்படுத்தி வருகின்றனர் என்றுரைத்த அருள்பணி Pestana அவர்கள், இந்த மாமன்றத்தில், அகில உலகத் திருஅவையும், குறிப்பாக, பொதுநிலையினரும் பங்குகொள்ளவேண்டும் என்று கூறும் திருத்தந்தையின் சிந்தனையோடு நாங்களும் இணைகின்றோம் என்று கூறினார்.

அங்கோலா திருஅவை, 2021ம் ஆண்டு அக்டோபர் முதல், 2023ம் ஆண்டு அக்டோபர் வரை, உலக ஆயர்கள் மாமன்றப் பயணத்தை உயிர்த்துடிப்போடு மேற்கொள்ளும் என்றும், ஒவ்வொரு பங்குத்தளமும், மாமன்றக் குழுவை உருவாக்கி, அதற்காகப் பணியாற்றும் என்றும், அருள்பணி Pestana அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2021, 13:48