திருமணத் தயாரிப்பு திருமணத் தயாரிப்பு 

மகிழ்வின் மந்திரம்: திருமணத் தயாரிப்பு, பிறப்பிலேயே ஆரம்பமாகிறது

திருமணத்திற்கு சிறப்பாகத் தயாரிப்பவர்கள், தங்களின் பெற்றோரிடமிருந்து கிறிஸ்தவத் திருமணம் பற்றிக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் 

“மண ஒப்பந்தம் ஆனவர்கள், அன்பில் வளரும்போது, அவர்களுக்கு ஆதரவு வழங்குவதால் கிடைக்கும் மிகப்பெரும் நன்மைகளை, கிறிஸ்தவ சமூகங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று நான் ஊக்கப்படுத்துகிறேன்”. இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில், 'மண ஒப்பந்தம் ஆனவர்களை திருமணத்திற்கு தயாரித்தல்' (Preparing engaged couples for marriage:205-211) என்ற பகுதியின் 207ம் பத்தியைத் துவக்கியுள்ளார். அதே பத்தியிலும் அதற்கு அடுத்த பத்தியிலும் திருத்தந்தை  வெளியிட்டுள்ள கருத்துக்களின் சுருக்கம்...

இத்தாலிய ஆயர்களின் கணிப்புப்படி,  மண ஒப்பந்தம் ஆனவர்கள், அன்பிலும், தன்னையே வழங்குவதிலும், தங்களை உண்மையிலேயே அர்ப்பணிக்கும்போது, அவர்கள் திருஅவைக்கு விலைமதிப்பற்ற வளமாக உள்ளனர். இதனால் அவர்களால் திருஅவை சமுதாயம் முழுவதன் புதுப்பித்தலுக்கு உதவமுடியும். அவர்களிடையே நிலவும் நட்புறவின் சிறப்பான வடிவம், கிறிஸ்தவ சமுதாயத்தில் நட்பையும், உடன்பிறந்த உணர்வையும் பேணி வளர்க்க முடியும். திருமணத் தயாரிப்புத் திட்டங்களை வகுப்பதற்கு, சட்டமுறைப்படி பல வழிகள் உள்ளன. அவற்றில், தனக்கு ஏற்றவற்றை, ஒவ்வொரு தலத்திருஅவையும் தேர்ந்து தெளியவேண்டும். மண ஒப்பந்தமானவர்களுக்கு, மறைக்கல்வி முழுவதும் கற்றுக்கொடுக்கப்படவேண்டும், அல்லது, நிறையத் தகவல்கள் அளிக்கப்படவேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதில், தம்பதியர், துணிவு மற்றும், மனத்தாராளத்தோடு, தங்கள் வாழ்வு முழுவதும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு உதவும் தகவல்கள் வழங்கப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். திருமணத் தயாரிப்பில், இளையோருக்கு உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு தலைப்புகள் பற்றி கலந்துரையாடல்கள் மற்றும், உரைகள் இடம்பெறுவது, அவர்களுக்கு உதவியாக இருக்கும். திருமணத் தயாரிப்புக்களில், மண ஒப்பந்தமானவர்களைத் தனித்தனியாக சந்தித்துப் பேசுவதும் முக்கியம். இதனால், அவர்கள், ஒருவரோடு, தன் வாழ்வு முழுவதையும் பகிர்ந்துகொள்ளத் திட்டமிடும் அவரின் உண்மை நிலையை எவ்வாறு அன்புகூர்வது என்பதைக் கற்றுக்கொள்வார்கள். ஒருவரை அன்புகூர்வது என்பது, தானாக நடப்பதோ அல்லது, திருமணத்திற்கு சற்று முன்பாக பயிற்சிப் பாசறையில் கற்றுக்கொடுக்கப்படுவதோ அல்ல. மேலும், ஒவ்வொரு தம்பதியருக்கும் திருமணத் தயாரிப்பு என்பது, பிறப்பிலேயே ஆரம்பமாகிறது. அவர்கள் தங்களின் சொந்தக் குடும்பத்தில் பெறும் அனுபவம், தங்களை முழுமையாக, மற்றும், வாழ்வு முழுவதும் அர்ப்பணிப்பதற்கு அவர்களைத் தயாரிக்க உதவுவதாக இருக்கவேண்டும். திருமணத்திற்கு சிறப்பாகத் தயாரிப்பவர்கள், தங்களின் பெற்றோரிடமிருந்து கிறிஸ்தவத் திருமணம் பற்றிக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே திருமண தயாரிப்பு குறித்த மேய்ப்புப்பணி திட்டங்கள், தம்பதியர், அன்பிலும், குடும்பத்தின் நற்செய்தியிலும், வளர்வதற்கும், வருங்காலத் திருமண வாழ்வுக்கு, பிள்ளைகளைத் தயாரிப்பதற்கும் உதவுவதாய் இருக்கவேண்டும். (அன்பின் மகிழ்வு 207,208)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2021, 14:20