இளம் தம்பதியருடன் பயணிக்கும் திருஅவையின் பிரதிநிதியான அருள்பணியாளர் இளம் தம்பதியருடன் பயணிக்கும் திருஅவையின் பிரதிநிதியான அருள்பணியாளர் 

மகிழ்வின் மந்திரம் : தேங்கி நிற்கும் நீர் பயனற்றது

திருமண உறவில் உருவாகக்கூடிய தேக்க நிலையைப்பற்றி, 219, மற்றும் 220 ஆகிய இரு பத்திகளில், திருத்தந்தை, அக்கறையுடன் கூறும் கருத்துக்களின் சுருக்கம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்று தலைப்பிடப்பட்டுள்ள 6ம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள கருத்துக்கள், 60 பத்திகளில் பதிவாகியுள்ளன. இவற்றில், இளம் தம்பதியர், திருமண வாழ்வைத் துவக்கும்போது, முதல் சில ஆண்டுகளில், திருஅவை, அவர்களுடன் எவ்வாறு உடன் பயணிக்கவேண்டும் என்பதை விளக்கிக் கூறியுள்ளார். இப்பகுதியில், திருமண உறவில் உருவாகக்கூடிய தேக்க நிலையைப்பற்றி, 219, மற்றும் 220 ஆகிய இரு பத்திகளில், திருத்தந்தை, அக்கறையுடன் கூறும் கருத்துக்களின் சுருக்கம்:

தேங்கி நிற்கும் நீர் எதற்கும் பயனில்லை என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. திருமண வாழ்வின் முதல் ஆண்டுகளில், தம்பதியரின் அன்பு, தேக்கநிலையை அடைந்தால், வாழ்வை, இணைந்து தொடர்வதற்குத் தேவையான உந்துசக்தியை, அவர்கள் இழக்க நேரிடும். இளமையான அன்பு, மிகுந்த நம்பிக்கையுடன், எதிர்காலத்தை நோக்கி, நடனமாடியபடியே செல்லவேண்டும். இந்த முதல் ஆண்டுகளில் உருவாகும் வாதங்கள், மோதல்கள், பிரச்சனைகள் ஆகியவற்றைத் தாண்டி, பரந்துவிரிந்த பார்வையைத் தரும் புளிக்காரமாக, நம்பிக்கை செயல்படுகிறது. மேலும், இந்த நம்பிக்கை, நிகழ்காலத்தை, முழுமையாக வாழவும், அதன்வழியே, உறுதியான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவுகிறது.

பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, தாராள மனம், மற்றும் தியாகம் ஆகியவற்றிற்கு அழைப்புவிடுக்கிறது. ஒருவர் ஒருவர் மீது முதலில் தோன்றும் சக்திமிகுந்த ஈர்ப்பு, நாளடைவில், அடுத்தவர், தன் வாழ்வின் ஓர் அங்கம் என்பதை உணரவைக்கிறது. அடுத்தவரின் மகிழ்வை, தன் மகிழ்விற்கு மேலாகக் கருதி, திருமண வாழ்வை, இருவரும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சியாகக் காண உதவுகிறது. அன்பு, முதிர்ச்சி அடையும்போது, கலந்துரையாடல், பரிமாற்றம் ஆகியவற்றை, இளம் தம்பதியர் கற்றுக்கொள்கின்றனர். திருமணவாழ்வின் ஒவ்வொரு புதிய நிலையிலும், இந்த கலந்துரையாடலும், பரிமாற்றமும் தொடர்ந்து நிகழவேண்டும். குடும்பவாழ்வில், தம்பதியர் தனித்தனியே முடிவெடுக்காமல், இணைந்து முடிவெடுக்கவேண்டும். திருமண வாழ்வில், ஒருவர் வெல்வதும், ஒருவர் தோற்பதும் கிடையாது. இருவரும் இணைந்து வெற்றியடையவேண்டும். (அன்பின் மகிழ்வு 219, 220)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2021, 13:35