கிறிஸ்தவத் திருமணம் கிறிஸ்தவத் திருமணம் 

மகிழ்வின் மந்திரம்: திருமணம் என்பது, ஒருமுறையோடு முடிவதில்லை

தம்பதியர், திருமண வாழ்வின் இலக்கை எட்டுவதற்கு, நிதானமாக அமர்ந்து பேசி திட்டமிடுதல் பெரிதும் உதவும் (அன்பின் மகிழ்வு 218)

மேரி தெரேசா: வத்திக்கான் 

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் ஆறாவது பிரிவில், (மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்) 'திருமண வாழ்வின் முதல் ஐந்து ஆண்டுகளில் உடன்செல்லுதல்' என்ற பகுதியின், முதல் இரண்டு (217,218) பத்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்...

திருமணத்தை, அன்புசார்ந்த விடயமாக நோக்குவது முக்கியம். திருமணத்தை, சுதந்திர மனநிலையோடு தேர்ந்துகொள்பவர்கள், மற்றும், ஒருவரையொருவர் அன்புகூர்பவர்கள் மட்டுமே, அவ்வாழ்வில் நுழையலாம். திருமண வாழ்வின் முதல் ஐந்து ஆண்டுகளில், தம்பதியர், தங்களது வாழ்வை வளப்படுத்தவும், வாழ்வு முழுவதும் ஒருவரையொருவர் அன்புகூரவும் அவர்களுக்கு உதவிகள் தேவை. நிச்சயம் செய்யப்பட்ட காலத்தில், திருமணம் பற்றி தம்பதியர், முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம். ஆனால், பல நேரங்களில், பல்வேறு காரணங்களால், அந்தக் காலம் போதுமானதாக இருப்பதில்லை. தம்பதியரும் போதுமான பக்குவத்தைப் பெற்றிருப்பதில்லை. இதனால், புதிய திருமணத் தம்பதியருக்கு, அவ்வாழ்வு பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இன்னும், திருமணம் என்பது, ஒருமுறை மட்டும் நடைபெறும் நிகழ்வு அல்ல என்பதை தம்பதியர் புரிந்துகொள்ள உதவுவது, திருமணத் தயாரிப்பில் உள்ள மற்றுமொரு மிகப்பெரும் சவால். தம்பதியரின் பிணைப்பு, உண்மையானது, மாற்றமுடியாதது, உறதிசெய்யப்படுவது, மற்றும், திருமணம் எனும் அருளடையாளத்தால் அர்ச்சிக்கப்படுவது. இவர்கள், வாழ்வில் இணைவதன் வழியாக, வாழ்வு முழுவதும் தொடரும் திட்டத்தில், உயிர்த்துடிப்போடும் படைப்பாற்றலோடும் இருக்கவேண்டியவர்கள். கடவுள் வழங்கும் அருளின் உதவியோடு வருங்காலத்தை நோக்கியவர்களாய், தினமும் வாழ்வைக் கட்டியெழுப்ப அழைப்புப்பெறுகின்றனர். இந்தக் காரணத்திற்காகவே, அவர்கள், மற்றவரை நிறைவானவர்கள் என எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள், ஒருவர் மற்றவரை, அவரவர் இருப்பதுபோலவே ஏற்கவேண்டும். குறைகூறும் மனநிலையோடு அடுத்தவரை நோக்கினால், பொறுமை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, மனத்தாராளம் ஆகியவற்றோடு ஒன்றிணைந்து பணியாற்றவேண்டிய திட்டத்தில், அவர்கள் நுழைய முடியாது. இது சிறிது சிறிதாக, இறுதியில், நிச்சயமாக, போட்டியிலும், தன்னிலையை நியாயப்படுத்துவதிலுமே முடிந்துவிடும். எனவே திருமணத்தின் இலக்கை எட்டுவதற்கு, அவ்வாழ்வில் எதிர்ப்படும் தடைகளை மேற்கொண்டு வாழ்வைத் தொடரவேண்டும் என்பது தம்பதியருக்கு கற்றுக்கொடுக்கப்படவேண்டும். அவர்கள் நிதானமாக அமர்ந்து பேசி திட்டமிடுதலே, தங்கள் இலக்கை எட்ட இயலும். (அன்பின் மகிழ்வு 217,218)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2021, 14:35