குடும்பங்கள் மாநாடு நிகழ்வில் குடும்பத்தினர் குடும்பங்கள் மாநாடு நிகழ்வில் குடும்பத்தினர் 

மகிழ்வின் மந்திரம்: குடும்பத்திற்குள்ளேயே திருத்தூதுப்பணி

திருஅவையின் குடும்பங்கள் சார்ந்த மேய்ப்புப்பணி திட்டங்கள், இக்காலத்திற்கு, குறிப்பாக, உலகப்போக்கு அதிகமாகவுள்ள நாடுகளுக்குத் தேவையான விழுமியங்களைப் பரிந்துரைப்பதாய் இருக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில் அமைந்துள்ள 6ம் பிரிவில், “இன்றையக் குடும்பத்தின் நற்செய்தியை அறிவித்தல்” என்பது பற்றி, 200 மற்றும், 201ம் பத்திகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள கருத்துக்கள்...

கிறிஸ்தவக் குடும்பங்கள், திருமணம் எனும் அருளடையாளத்தில் பெறுகின்ற இறையருளால், அவைகள், குடும்பத் திருத்தூதுப் பணியைச் செயல்படுத்துவதில், சிறப்பாக, இல்லத் திருஅவைகளாக, மகிழ்வுநிறை சான்றுகளைப் பகர்வதன் வழியாக, முதன்மை இடம் வகிக்கின்றன. இதன் பயனாக, மக்களும், தங்களின் மனங்களையும் வாழ்வையும் நிரப்பும் மகிழ்ச்சியாக, குடும்பத்தின் நற்செய்தியை அனுபவிக்கின்றனர். ஏனெனில், பாவம், துயரம், அக வெறுமை, மற்றும், தனிமை ஆகியவற்றினின்று நாம், கிறிஸ்துவில் விடுதலை பெற்றுள்ளோம் (நற்செய்தியின் மகிழ்வு 1). மேலும், குடும்பங்கள் எதிர்கொள்ளும் எல்லாவிதத் தடைகளையும் தாண்டிச் செல்வதற்குச் சிறந்த வழிகளைக் கண்டுகொள்ள, திருஅவையும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவ விரும்புகிறது என்பதை நாம் மறக்கக் கூடாது. திருஅவையின் மேய்ப்புப்பணி திட்டங்கள், குடும்பத்தின் உயிரியல் சார்ந்தவற்றில் மட்டும் கவனம் செலுத்துவதாய் இருந்தால் போதாது, மாறாக, அத்திட்டங்கள், குடும்பத்திற்குள்ளேயே, நற்செய்தி மற்றும், மறைக்கல்வியைப் போதிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும், குடும்ப திருத்தூதுப் பணியையும் ஊக்குவிப்பதாய் இருக்கவேண்டும். இந்த முயற்சிக்கு, திருஅவையில் அனைவரிடமும் மறைப்பணி மனமாற்றம் அவசியம். அதாவது, மக்களின் உண்மையான பிரச்சனைகளோடு தொடர்பில்லாத, வெறும், வார்த்தையளவில் செய்திகளை அறிவிப்பதால் திருப்திபெறக் கூடாது. குடும்பத்தின் நற்செய்தி என்பது, மனிதரின் ஆழமான எதிர்பார்ப்புக்களுக்குப் பதிலளிப்பதாகும். இந்த அம்சத்தை, குடும்பங்கள் மீது அக்கறையோடு மேற்கொள்ளப்படும் மேய்ப்புப்பணி தெளிவுபடுத்துவதாய் இருக்கவேண்டும். இதற்கு வெறும் விதிமுறைகள் பட்டியல் ஒன்றை வழங்கினால் மட்டும் போதாது. ஆனால், இக்காலத்திற்கு, குறிப்பாக, உலகப்போக்கு அதிகமாகவுள்ள நாடுகளுக்குத் தேவையான விழுமியங்களைப் பரிந்துரைப்பதாய் இருக்கவேண்டும். உண்மையான குடும்ப வாழ்வுக்குத் தடையாய் இருக்கும், மற்றும், பாகுபாடு, வறுமை, ஒதுக்கப்படுதல், வன்முறை ஆகியவற்றுக்கு இட்டுச்செல்லும், கலாச்சார, சமூக, அரசியல், மற்றும், பொருளாதாரம் ஆகிய அனைத்துக் கூறுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி புறக்கணிக்கப்படுவது, நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு அவசியம். எனவே, இதற்குத் தேவைப்படும் உரையாடலும் ஒத்துழைப்பும் சமுதாய அமைப்புமுறைகளோடு, பேணிவளர்க்கப்படவேண்டும். இதில், கலாச்சார மற்றும், சமூக-அரசியல் துறைகளில் ஈடுபட்டுள்ள பொதுநிலை கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். (அன்பின் மகிழ்வு 200,201)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2021, 14:54