தேம்ஸ் நதியில் படகில் ஓர் இளம் தம்பதி தேம்ஸ் நதியில் படகில் ஓர் இளம் தம்பதி 

மகிழ்வின் மந்திரம் : திருமணமும் ஒரு வகையான “மீட்பின் வரலாறு”

திருமண வாழ்க்கை எனும் வளர்ச்சிப் பாதையில் தம்பதியருள் ஒவ்வொருவரும் மற்றவரின் வளர்ச்சிக்கு உதவும் இறைவனின் கருவியாகச் செயல்படுகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்று தலைப்பிடப்பட்டுள்ள 6ம் பிரிவில், திருமண உறவில் உருவாகக்கூடிய தேக்க நிலையைப்பற்றி, 221ம் பத்தியில், கூறும் கருத்துக்களின் சுருக்கம்:

திருமணங்கள் உடைபடுவதற்கான காரணங்களுள் ஒன்று, திருமண வாழ்வு குறித்த மிகைப்பட்ட எதிர்பார்ப்பு. கற்பனை செய்ததைவிட எதார்த்தம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், சவாலானதாகவும் இருப்பது தெளிவாகத் தெரியவரும்போது, அதற்குரிய தீர்வு என்பது, பிரிவினை பற்றி விரைவாகவும், பொறுப்பற்றதாகவும் சிந்திப்பதல்ல. மாறாக, திருமண வாழ்க்கை என்பது, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட ஒன்று  என்பதை நிதானமாக உணர வேண்டும். அந்த வளர்ச்சிப் பாதையில் தம்பதியருள் ஒவ்வொருவரும் மற்றவரின் வளர்ச்சிக்கு உதவும் இறைவனின் கருவியாகச் செயல்படுகின்றனர். இங்கு, ஒவ்வொரு மனிதருள்ளும் காணப்படும் நல்குணங்கள் மலர்வதும், மாற்றங்களும், முன்னேற்றங்களும் இடம்பெறுதலும் சாத்தியமே. ஒவ்வொரு திருமணமும் ஒரு வகையான “மீட்பின் வரலாறு” ஆகும். இது, பலவீனமான தொடக்கங்களிலிருந்து, இறைவனின் கொடை, நம் தாராள மனப்பான்மை மற்றும்  படைப்புத்திறனுடன் கூடிய பதிலுரைப்பில் வளர்ந்து, காலப்போக்கில், விலைமதிப்பற்றதாகவும், நீடித்த நிலைத்த ஒன்றாகவும் மாறுகிறது. அன்பில் இரண்டு நபர்களின் மிகப் பெரிய பணி என்பது, ஒருவருக்கொருவர் முறையே, மேலும் வளர்வதற்கு உதவுவதே என நம்மால் கூற இயலுமா? வளர்ச்சிக்கு ஊக்கமூட்டுவது என்பது, ஒருவர் தன் தனித்தன்மையை வடிவமைக்க உதவுவதாகும். இவ்வாறு பார்க்கும்போது, அன்பு என்பது ஒரு வகை கைவினைத்திறன் எனலாம். ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டதைப் பற்றி விவிலியத்தில் படிக்கும்போது, கடவுள் முதலில் ஆதாமை உருவாக்குவதைக் காண்கிறோம் (தொ.நூ.2,7). ஆதாம் படைக்கப்பட்டபோது, அங்கு, அத்தியாவசியமான ஒன்று இல்லாததை கடவுள் உணர்ந்தார். எனவே அவர் ஏவாளை உருவாக்குகிறார். பின்னர், ஆதாம் ஆச்சரியத்துடன், "ஆம், இது எனக்கு ஏற்றது!", என கூச்சலிடுவதைக் கேட்கிறார் கடவுள். ஆணும் பெண்ணும் முதன்முதலில் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது நடந்திருக்கக்கூடிய வியப்பு மிகுந்த உரையாடலை நாம் ஏறக்குறைய இன்றும் கேட்கலாம். திருமணமான தம்பதியரின் வாழ்க்கையில், கடினமான தருணங்களில் கூட, ஒருவர் எப்போதும் மற்றவரை வியப்பிலாழ்த்தலாம், அப்போது, அவர்கள் முதன்முறையாகத்தான் சந்திப்பதுபோல், உறவின் புதிய கதவுகள் திறக்கப்படலாம். ஒவ்வொரு புதிய கட்டத்திலும், அவர்கள் ஒருவருக்கொருவர் "உருவாகுதலில்" உதவ முடியும். ஒரு கைவினைஞரின் பொறுமையுடன், கடவுளிடமிருந்து வரும் பொறுமையுடன், ஒவ்வொருவரும் உருப்பெற மற்றவர் காத்திருக்கச் செய்கின்றது அன்பு.(அன்பின் மகிழ்வு 221)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2021, 12:53