இளம் தம்பதி இளம் தம்பதி 

மகிழ்வின் மந்திரம் : நெருக்கடிகளின் சவால்

ஒவ்வொரு நெருக்கடியும், ஒன்றாக இணைந்து வளர்வதற்கும், திருமணம் என்றால் என்ன என்பதை இன்னும் அதிகமாக கற்றுக் கொள்வதற்கும் ஒரு பயிற்சியைத் தருவதாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" (பிரிவு 6) என்ற தலைப்பின் கீழ், 232ம் பத்தியில், 'நெருக்கடிகளின் சவால்' என்பதுபற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ: 

ஒவ்வொருவரின் குடும்ப வாழ்வும் பல்வேறு நெருக்கடிகளால் குறிக்கப்படுகிறது, இருப்பினும், இவை அதன் வியத்தகு அழகின் ஒரு பகுதியாகும். ஒரு நெருக்கடியை சமாளிப்பது, அவர்களின் உறவை பலவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர தம்பதியருக்கு உதவவேண்டும். பலவீனப்படுத்துவதற்கு பதிலாக, அது அவர்களின் உறவு ஒன்றிப்பு எனும் திராட்சை இரசத்தை மேம்படுத்தி, முதிர்ச்சியடையச் செய்யமுடியும். ஒன்றிணைந்த வாழ்வு, வாழ்வின் நிறைவை குறைப்பதில்லை, மாறாக அதிகரிக்கவேச் செய்யும். வழியில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு புதிய அடியும், மகிழ்ச்சிக்குரிய புதிய வழிகளைக் கண்டறிய தம்பதியருக்கு உதவும். ஒவ்வொரு நெருக்கடியும், ஒன்றாக இணைந்து வளர்வதற்கும்,  திருமணம் என்றால் என்ன என்பதை இன்னும் அதிகமாக கற்றுக் கொள்வதற்கும் ஒரு பயிற்சியைத் தருவதாக உள்ளது. மனத்தளர்ச்சியடையத் தேவையில்லை, ஏனெனில், ஒவ்வொரு நெருக்கடியையும், ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அணுகும்போது, தம்பதியரின் உறவை மேம்படுத்த, அது ஒரு வாய்ப்பாகிறது. நெருக்கடிகளையும், சவால்களையும், எதிர்கொள்வதிலும், மற்றும், குடும்ப வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவைகளை அங்கீகரித்து ஏற்பதிலும் தம்பதியர் உதவிகளைப் பெறுகின்றனர். அனுபவம் நிறைந்த, மற்றும், பயிற்சிபெற்ற தம்பதிகள் சரியான வழிகாட்டுதல்களை வழங்க தயாராக இருக்கவேண்டும், அப்போது, இளம்  தம்பதிகள் இந்த நெருக்கடிகளால் பதற்றமடையமாட்டார்கள், அல்லது அவசர முடிவெடுக்க முன்வரமாட்டார்கள். ஒவ்வொரு நெருக்கடியும், நமக்கு ஒரு பாடமாக அமைகிறது; இதயத்தின் காது கொண்டு அதற்கு நாம் செவிமடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். (அன்பின் மகிழ்வு 232)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2021, 11:30