ஆபிரகாம் தகிட் சொரங் (Abraham Tagit Sorang) ஆபிரகாம் தகிட் சொரங் (Abraham Tagit Sorang) 

எவரெஸ்ட் சிகரத்தில், அன்னைமரியாவின் செபமாலை காணிக்கை

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆபிரகாம் தகிட் சொரங் என்ற 24 வயது கத்தோலிக்கர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அங்கு, அன்னைமரியாவின் செபமாலை ஒன்றை, காணிக்கையாக வைத்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆபிரகாம் தகிட் சொரங் (Abraham Tagit Sorang) என்ற 24 வயது கத்தோலிக்கர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அங்கு, அன்னைமரியாவின் செபமாலை ஒன்றை, காணிக்கையாக வைத்தார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஆபிரகாம் அவர்கள், அருணாச்சல பிரதேச கத்தோலிக்கக் கழகம் (APCA) வழங்கிய நிதி உதவியால், எவரெஸ்ட் சிகரத்தை, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதத்தின் இறுதி நாளான, மே மாதம் 31ம் தேதி அடைந்து, ஜூன் 13 கடந்த ஞாயிறன்று, மீண்டும், தன் இல்லம் திரும்பியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தின் Itanagar புனித மரியா பங்கில், இளையோர் பணியில் ஈடுபட்டுள்ள ஆபிரகாம் அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக எவரெஸ்ட் சிகரத்தை அடையும் ஆர்வத்தை நிறைவேற்ற பல வழிகளில் முயன்றுவந்துள்ளார்.

தனக்குத் தேவையான நிதி உதவியை, அருணாச்சல பிரதேச கத்தோலிக்கக் கழகம் (APCA) என்ற அமைப்பு, 'வாட்ஸப்' குழுவின் உதவியோடு திரட்டி வழங்கியது என்றும், அதைவிடக் கூடுதலாக, தன் பங்கு மக்கள் அன்னைமரியாவிடம் தனக்காக செபித்து வந்தது பெரும் உதவியாக இருந்தது என்றும், ஆபிரகாம் அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

தன் பெற்றோர் பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தான் 2000மாம் ஆண்டு கத்தோலிக்க மறையில் திருமுழுக்கு பெற்றதாகவும், 2003ம் ஆண்டு, தன் அன்னை மரணமடைந்தபின், தனக்கு அன்னை மரியா உண்மையான தாயாக மாறினார் என்றும், ஆபிரகாம் கூறினார்.

எவரெஸ்ட் சிகரத்திற்கு அவர் எடுத்துச்சென்ற செபமாலையையும், அன்னையின் ஒரு சிறு உருவத்தையும் அங்கு காணிக்கையாக வைத்ததை, புகைப்படத்தில் பதிவிட்டு, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஆபிரகாம்.

இளையோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துவரும் ஆபிரகாம் அவர்கள், எப்போதும் உன்னதத்தை அடையவேண்டும் என்பதில் காட்டிய ஆர்வம், அவரை, எவரெஸ்ட் சிகரத்திற்கு அழைத்துச்சென்றது என்று Itanagar ஆயர் ஜான் தாமஸ் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2021, 14:25