பொலிவியாவில் தடுப்பூசி வழங்கல் பொலிவியாவில் தடுப்பூசி வழங்கல் 

ஏழை நாடுகளுக்கு இலவச தடுப்பூசிகள் - அமெரிக்க ஆயர்கள் நன்றி

லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள், ஜூலை 1ம் தேதி, திருத்தந்தையுடன் மேற்கொள்ளவிருக்கும் இறைவேண்டல் நிகழ்வு, இறையருளையும், இரக்கத்தையும் வழங்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்ட அமெரிக்க ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றால் பல்வேறு இன்னல்களை அடைந்துள்ள ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் முன்வந்திருப்பதற்கு, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

குறைந்த வருமானமுடைய ஏழை நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசிகளை வழங்கும் அரசுத்தலைவர் பைடன் அவர்களின் திட்டம் குறித்து  நன்றியை வெளியிட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் José Gomez, மற்றும் ஆயர்பேரவையின் அனைத்துலக நீதி, மற்றும் அமைதி அவைத் தலைவர், ஆயர்  David Malloy ஆகிய இருவரும் வெளியிட்ட அறிக்கையில், உலக நாடுகளுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் இந்த நடவடிக்கை, பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, குறிப்பாக ஆப்ரிக்காவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் மிகவும் அத்தியாவசமானது என தெரிவித்துள்ளனர்.

ஏழை நாடுகளுடன் தடுப்பூசிகளை பகிர்ந்து, பணக்கார நாடுகள் தங்கள் உலகளாவிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஏற்கனவே இவ்வாண்டு கிறிஸ்து உயிர்ப்பு விழா செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.

மேலும், பொருளாதார, மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவரும் லெபனான் நாட்டிற்கு ஆதரவு வேண்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்புடன் தங்கள் குரலையும் இணைத்துள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.

லெபனான் நாட்டின் அமைதியையும் நிலையான தன்மையையும் வேண்டி, ஜூலை மாதம் முதல் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் லெபனான் கிறிஸ்தவத் தலைவர்களுடன் இணைந்து, ஒருநாள் இறைவேண்டலையும் கலந்துரையாடலையும் நடத்தவுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள அமெரிக்க ஆயர்கள், லெபனான் மக்களுக்கு, தங்கள் முழு ஆதரவையும் வெளியிட்டுள்ளனர்.

மத்தியக்கிழக்குப் பகுதிக்கும் உலகுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்துவந்த லெபனான் நாடு, தற்போது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவது குறித்து அமெரிக்க ஆயர்களின் கவலையை வெளியிட்ட ஆயர் Malloy அவர்கள், லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள், ஜூலை 1ம் தேதி, திருத்தந்தையுடன் மேற்கொள்ளவிருக்கும் இறைவேண்டல் நிகழ்வு, இறையருளையும், இரக்கத்தையும் வழங்கும் நிகழ்வாக அமைந்து, நல்வழியைக் காட்டும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2021, 13:35