திருத்தந்தை புனித 6ம் பவுல், 278 திருத்தொண்டர்களை அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்திய திருப்பலி - கோப்புப் படம் 1970 திருத்தந்தை புனித 6ம் பவுல், 278 திருத்தொண்டர்களை அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்திய திருப்பலி - கோப்புப் படம் 1970 

அருள்பணியாளர் புனிதமடைய செபிக்கும் உலக நாள்

1995ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், அருள்பணியாளர் புனிதமடைய செபிக்கும் உலக நாளை உருவாக்கி, அது, ஒவ்வோர் ஆண்டும், இயேசுவின் தூய்மைமிகு இதயம் திருநாளன்று கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 11, இவ்வெள்ளியன்று, இயேசுவின் தூய்மைமிகு இதயம் திருநாளன்று, அருள்பணியாளர் புனிதமடைய செபிக்கும் உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலத்திருஅவை, அந்நாளை, அருள்பணியாளருக்கு செபிக்கும் நாளாக கடைபிடிக்குமாறு விசுவாசிகளிடம் விண்ணப்பித்துள்ளது.

நற்செய்தியை அறிவிக்கும் பணியில், ஒருவர், தனிமைப்படுத்தப்படுவதும், வெறுக்கப்படுவதும் நிகழ்வது சாத்தியம் என்றும், இத்தகைய தனிமையையும், வெறுப்பையும் அருள்பணியாளர்கள் அடைந்துவருகின்றனர் என்றும், அமெரிக்க ஆயர் பேரவையின், அருள்பணியாளர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் James Checchio அவர்கள் ஓர் அறிக்கை வழியே கூறியுள்ளார்.

இத்தகைய பிரச்சனைகளைச் சந்திக்கும் சகோதர அருள்பணியாளர்கள், தங்கள் சிலுவையை அவர்கள் தனியே சுமப்பதில்லை, மாறாக, அவர்களுக்கு முன்னே கிறிஸ்துவும் சிலுவையைச் சுமந்து சென்று, இத்தகைய துன்பங்களை எவ்வாறு தாங்குவது என்று சொல்லித்தருகிறார் என்று, ஆயர் Checchio அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நற்செய்தி அறிவிப்பு பணி, தன்னிலேயே துன்பங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களுக்கென, ஏப்ரல் 1, புனித வியாழனன்று நிறைவேற்றிய  திருப்பலியில் கூறிய சொற்களை, ஆயர் Checchio அவர்கள், தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1995ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், புனித வியாழனையொட்டி அருள்பணியாளருக்கென எழுதிய மடலில், அருள்பணியாளர் புனிதமடைய செபிக்கும் உலக நாளை உருவாக்கி, அது, ஒவ்வோர் ஆண்டும், இயேசுவின் தூய்மைமிகு இதயம் திருநாளன்று, கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

அருள்பணியாளர்கள், தங்கள் அழைத்தலின் புனிதத்துவத்தை, ஆழ்ந்து தியானிப்பதற்கும், அவர்கள் அந்தப் புனிதத்துவத்தில் நிலைத்திருக்க, விசுவாசிகள், அவர்களுக்காக செபிப்பதற்கும், இந்த உலக நாள் உருவாக்கப்பட்டதென, திருத்தந்தை, புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2021, 14:22