ஆப்ரிக்காவின் மேற்கு பகுதி ஆயர்கள் ஆப்ரிக்காவின் மேற்கு பகுதி ஆயர்கள்  

திருஅவையின் நம்பிக்கை ஒளியான ஆப்ரிக்காவுக்கு நிதி உதவி

ஆப்ரிக்கத் திருஅவைகளின் முன்னேற்றப்பணிகளுக்காக, 13 இலட்சத்து, 60 ஆயிரம் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2021ம் ஆண்டின் கோடைக்காலத்தில் நடைபெறவிருக்கும் ஆப்ரிக்கத் திருஅவைகளின் முன்னேற்றப்பணிகளுக்காக, 13 இலட்சத்து, 60 ஆயிரம் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

வறுமை, மோதல்கள், மற்றும் வறட்சி ஆகிய பிரச்சனைகளைச் சந்தித்துவரும் ஆப்ரிக்கக் கண்டம், கத்தோலிக்கத் திருஅவையின் நம்பிக்கை ஒளியாக இருப்பதை மனதில் கொண்டு, 27 ஆயர் பேரவைகள், மற்றும் துறவுசபைகளின் மேய்ப்புப்பணி திட்டங்களுக்காக இந்த் நிதி உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்கத் திருஅவையுடன் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க, அமெரிக்க கத்தோலிக்கர்கள் வழங்கிய நன்கொடைகளின் வழியே, இந்த நிதி உதவி சாத்தியமானது என்று கூறும் அமெரிக்க ஆயர்கள், இந்தப் பெருந்தொற்று காலத்திலும், அமெரிக்க கத்தோலிக்கர்கள் தாராள மனதுடன் உதவ முன்வந்துள்ளது, ஆப்ரிக்கத் திருஅவையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் என்று கூறியுள்ளனர்.

பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பேணிக்காத்தல், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல், உள்ளூர் மொழிகளில் நற்செய்தி அறிவித்தல், புலம்பெயர்ந்தோருக்கு மேய்ப்புப்பணி, இளையோருக்குப் பாதுகாப்பு, மறைக்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி என்று பல திட்டங்களுக்கு இந்த நிதி உதவி பயன்படுத்தபப்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2021, 15:52