புனித யோவான் இலாத்தரன் கோவிலின் உள்தோற்றம் புனித யோவான் இலாத்தரன் கோவிலின் உள்தோற்றம் 

திருத்தந்தையர் வரலாறு - குறுகிய வரலாறுகளும் நெடும் துயர்களும்

உரோமைக்கு அருகே, நிரந்தரமாக ஆக்கிரமிப்புக்களைக் கொண்டிருந்த Saracensகளை விரட்ட, படைகளை முன்னின்று வழிநடத்திய திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை ஒன்பதாம் யோவான் அவர்கள், 900மாம் ஆண்டின் துவக்கத்தில் உயிரிழந்தபோது, அடுத்து வந்தவர், திருத்தந்தை 4ம் பெனடிக்ட். திருத்தந்தை 4ம் பெனடிக்ட், 903ம் ஆண்டு கோடைகாலத்தில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்தான் Luis the Blindஐ பேரரசராக முடிசூட்டினார்.

903ம் ஆண்டு ஆகஸ்டில் தேர்வுச் செய்யப்பட்ட திருத்தந்தை 5ம் லியோ குறித்தும் வரலாற்றில் அதிகம் இல்லை. இவர் 30 நாட்களே பதவி வகித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. திருத்தந்தை 5ம் லியோவுக்கு எதிராக இருந்த கிறிஸ்டோபர் என்ற கர்தினால் இவரை பதவியிலிருந்து தூக்கி சிறையிலடைத்ததாக சில வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இந்த கர்தினால் கிறிஸ்டோபர், திருத்தந்தை 5ம் லியோவை சிறைவைத்துவிட்டு, தானே திருத்தந்தை என அறிவித்து, தலைமைப்பீடத்தைக் கைப்பற்றிக் கொணடார். ஆனால், அவராலும் தொடர்ந்து பதவியில் இருக்க முடியவில்லை. Sergius என்பவர் திருத்தந்தையானார்.

இந்த திருத்தந்தை Sergius, அதாவது மூன்றாம் Sergiusதான், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை ஒன்பாதம் யோவானை எதிர்த்து திருத்தந்தையர் தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் நகரைவிட்டே வெளியேற்றப்பட்டவர். திருத்தந்தை 5ம் லியோவை சிறையிலடைத்த கர்தினால் கிறிஸ்டோபரை உரோமை மக்கள் சிறையிலடைத்து, தன்னை பதவியேற்குமாறு அழைத்தபோதுதான் உரோமுக்கேத் திரும்பினார்  திருத்தந்தை மூன்றாம் Sergius. ஆனால், திருத்தந்தை 5ம் லியோ, சிறையிலேயே கொல்லப்பட்டாரா, அல்லது சிறையிலோ, பின்னர் துறவுமடம் ஒன்றிலோ இயற்கையாய் மரணமடைந்தாரா என்பது குறித்து தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. திருத்தந்தை மூன்றாம் Sergius, உரோமின் இலாத்தரன் பசிலிக்காவை சீரமைத்தார். இங்கிலாந்தில் சில புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் பதவி வகித்து 911ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ந் தேதி இறைபதம் சேர்ந்தார், ஒருகாலத்தில் திருஅவையிலிருந்தே விலக்கி வைக்கப்பட்டிருந்த திருத்தந்தை மூன்றாம் Sergius.

அடுத்து பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் வழிநடத்திய திருத்தந்தை மூன்றாம் அத்தனாசியுஸ், அதற்கு அடுத்து வந்து,  ஆறுமாங்களே வழிநடத்திய திருத்தந்தை Lando ஆகியோரைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் அவ்வளவாக இல்லை. அடுத்ததாக, 914ம் ஆண்டு, திருஅவையின் 122வது திருத்தந்தையாக பதவியேற்றவர் திருத்தந்தை பத்தாம் யோவான். இவர் Ravenna வின் பேராயராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். அப்பதவியில் இருந்தபோதுதான் உரோமை ஆயராக அதாவது, திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உரோமைய மக்களால் இன்னொரு மறைமாவட்ட ஆயர் எங்ஙனம் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். மக்களால் அல்ல, மாறாக, உரோமை பிரபுக்கள் கூட்டத்தின் அதிகாரத்தால், இவர் திருத்தந்தையாக்கப்பட்டார். காரணம் என்னவெனில், பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த Theodora என்பவருக்கு இவர் உறவினராக இருந்தார்.

திருத்தந்தை 10ம் யோவான் Saracens எனப்படும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இத்தாலிய மன்னர்களின் துணையுடன் படையெடுத்தார். உரோமைக்கு அருகே நிரந்தர ஆக்கிரமிப்புக்களைக் கொண்டிருந்த Saracensகளை விரட்ட Naples மற்றும் Amalfi நகர்களின் படைகளை முன்னின்று வழிநடத்திச் சென்றவரே இந்த திருத்தந்தைதான். இந்த Saracens கடற்கொள்ளைக்காரர்கள் தாம் 846ம் ஆண்டே உரோம் நகருக்குள் புகுந்து புனித பேதுரு பேராலயத்தைச் சூறையாடினார்கள். இத்தாலியை முழுவதுமாக கைப்பற்ற Saracens கொண்ட முயற்சி, திருத்தந்தை 10ம் யோவானால் முறியடிக்கப்பட்டது.

இத்தாலிய மன்னர்களிடையே ஒன்றிப்பை ஊக்குவித்தார் இத்திருத்தந்தை. லொம்பார்திய மன்னரான Friuliயின் Berengariusஐ பேரரசராக 915ல் இத்திருத்தந்தைதான் முடிசூட்டி வைத்தார். பிரான்சில் Heribert என்ற பிரபு, மன்னர் சார்லஸை சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, மன்னரை விடுவிக்க வேண்டுமானால், தன் நிபந்தனைக்கு திருத்தந்தை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார். ஆனால் அந்த நிபந்தனை, சிக்கலான ஒன்றாக இருந்தது. அதாவது Heribertன் மகன் Vermandoisன் Hugh என்பவர் Reimsன் பேராயராக நியமிக்கப்படவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. திடீரென்று ஒருவரை பேராயராக நியமிப்பதே இயலாத ஒன்று. ஆனால், இங்கே பேராயராக நியமிக்கப்பட வேண்டியவரின் வயது முக்கியமானதாக இருந்தது. அதாவது, Heribertன் மகனுக்கு அப்போது வயது 5 தான். ஆம். திருஅவை வரலாற்றில் 5 வயதில் பேராயராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான். மன்னரின் விடுதலைக்கு உறுதியளித்ததால், திருத்தந்தையும் 5 வயது பாலகனை பேராயராக்க, விருப்பமில்லாமலேயே அனுமதி அளித்தார். இந்த பாலகன் 6 ஆண்டுகள் பேராயராக இருந்து, அதாவது 925 முதல் 931 வரை பேராயராக இருந்து, Artoldus என்பவரால் பதவியிறக்கப்பட்டு, மீண்டும் 940 முதல் 946வரை Reims பேராயராக இருந்துள்ளார்.

திருத்தந்தை 10ம் யோவான் அரசியல் விவகாரங்களில் அதிகம் தலையிட்டு, சில வெளிமாநில மன்னர்களோடு அரசியல் உடன்பாடுகளும் கண்டதால், உரோமை பிரபுக்கள் குடும்பம் தங்கள் ஆதிக்கம் பாதிக்கப்படுமோ என அச்சம் கொண்டது. இதற்கிடையே, திருத்தந்தை 10ம் யோவான் திருத்தந்தையாவதற்குக் காரணமாக இருந்த Theodoraவின் மகள் Marozia, தன் முதல் கணவன் Albericன் மரணத்திற்க்குப்பின், Tuscanyயின் ஆதிக்கம் நிறைந்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த  Guido என்பவரை மணந்து, உரோமையில் அதிகாரம் செலுத்திவந்தார். இக்கணவரும் 929ம் ஆண்டு உயிரிழக்க, கணவரின சகோதர், Arlesன் Hugh என்பவரை மணந்தார். Burgundyயின் புதிய மன்னருடன் திருத்தந்தை நட்பு பாராட்டியதை விரும்பாத Marozia, திருத்தந்தைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டார். முதலில், உரோம் உயர் அதிகாரியாய் இருந்த திருத்தந்தையின் சகோதரர் Petrus, 928ம் ஆண்டு ஜூனில் கொலை செய்யப்பட்டார். அடுத்து, திருத்தந்தை 10ம் யோவான் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அங்கேயே மரணமடைந்த திருத்தந்தை 10ம் யோவான், இலாத்தரன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2021, 16:08