திருத்தந்தை புனித மூன்றாம் ஏட்ரியன் திருத்தந்தை புனித மூன்றாம் ஏட்ரியன் 

திருத்தந்தையர் வரலாறு – பெயர் குழப்பங்கள்

கான்ஸ்தாந்திநோபிளின் எட்டாவது பொது அவையில், திருத்தந்தையின் கொள்கைகளை உறுதியாக வலியுறுத்தி நின்றதால், சிறைப்படுத்தப்பட்ட முதலாம் மரினுஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கி.பி.882ம் ஆண்டு திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் திருத்தந்தை முதலாம் மரினுஸ். இவர் திருஅவையின் 108வது திருத்தந்தை. வரலாறுகள் என்பவை எப்போதும் புள்ளிமாறாமல், தூயதாக காக்கப்படுவதில்லை. காலங்கள் கடக்கும்போது ஆங்காங்கே கறைகள் வந்து சேர்வதுமுண்டு, பின்னர் கழுவப்படுவதுமுண்டு. மரினுஸ் என்ற பெயரும் வரலாற்றின் ஒரு சிறு தவறுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையர்களின் வரலாற்றை தொடர்ந்து கேட்டு வருபவர்களுக்கு ஏற்கனவே மார்ட்டின் என்பவர் திருத்தந்தையாக இருந்தது நினைவில் இருக்கும். கி.பி.649ம் ஆண்டு முதல் கி.பி.655ம் ஆண்டு வரை இருந்த இந்த திருத்தந்தை, இலத்தீன் மொழியில் முதலாம் மார்த்தினுஸ் என்றழைக்கப்பட்டார். நாம் இன்று நோக்க உள்ள திருத்தந்தையோ முதலாம் மரினுஸ்  என்ற பெயரை எடுத்துக்கொண்டார். இவருக்கும், இருபது திருத்தந்தையர்களுக்குப்பின் வந்த 128வது திருத்தந்தையோ இரண்டாம் மரினுஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். இதுவரை எந்த குழப்பமும் ஏற்படவில்லை. ஆனால் திருத்தந்தை இரண்டாம் மரினுஸ் இறந்து 335 ஆண்டுகள் கடந்து வந்த 189வது திருத்தந்தை, மர்த்தினுஸ் என்ற பெயரை எடுத்தபோதுதான் வரலாற்றுப் பிழைத் துவங்கியது. அதாவது, 335 ஆண்டுகளில் வரலாற்று ஏடுகளில் சில குழப்பங்கள் ஏற்பட்டதால், 1281ம் ஆண்டு வந்தவர், முதலாம் மரினுஸையும், இரண்டாம் மரினுஸையும், மர்த்தினுஸ் என எடுத்துக்கொண்டார். அதாவது, 74வது திருத்தந்தை முதலாம் martinus ஆகவும், 108வது திருத்தந்தை முதலாம் மரினுஸ்க்குப் பதிலாக 2ம் மர்த்தினுஸ் ஆகவும், 129வது திருத்தந்தை இரண்டாம் மரினுஸ் என்பதற்குப் பதிலாக, 3ம் மர்த்தினுஸ் ஆகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 189வது திருத்தந்தை, தன்னை நான்காம் மர்த்தினுஸ் என அறிவித்துக்கொண்டார். இதனால் திருஅவையில் இரண்டாம், மூன்றாம் மர்த்தினுஸ் என்ற பெயரில் திருத்தந்தையர்கள் இல்லை. சில வரலாற்று ஆசிரியர்கள்தான் இடையில் பெயர்களைக் குழப்பிவிட்டனர். 

திருத்தந்தை முதலாம் மரினுஸ்

இப்போது, திருத்தந்தை முதலாம் மரினுஸ் குறித்து காண்போம். திருத்தந்தை எட்டாம் ஜான் இறந்த உடனேயே, அதே நாளில் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார் திருத்தந்தை முதலாம் மரினுஸ். அப்போது பேரரசராக இருந்தவர், மன்னருக்குரிய தகுதியேயற்ற Charles the Fat என்பவர். அவரின் அனுமதிக்காக காத்திருக்காமலேயே திருத்தந்தை முதலாம் மரினுஸின் பதவியேற்பு விழா இடம்பெற்றது என்பதை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். திருத்தந்தை  முதலாம் மரினுஸ் திருத்தந்தையானபின் அவர் ஆற்றிய பணிகள் குறித்து மிகக் குறைவாகவே வரலாற்றில் காணப்படுகின்றன. அதேவேளை, இவர் திருத்தந்தையாவதற்கு முன்னர் வகித்த பதவிகள் குறித்து வரலாற்றில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளன. இவரின் தந்தை Palumbo ஓர் அருள்பணியாளராக இருந்தவர். திருத்தந்தை முதலாம் மரினுஸ் அவர்கள், தன் 12ம் வயதிலேயே அருள்பணித்துவப் படிப்புக்கென உரோமைய திருஅவையில் தன்னை இணைத்துக் கொண்டவர். திருத்தந்தை நான்காம் லியோ அவர்கள், முதலாம் மரினுஸை  துணைத் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தினார். இவர் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டபின் மும்முறை கான்ஸ்தாந்திநோபிளுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக சென்று வந்துள்ளார். கான்ஸ்தாந்திநோபிளின் எட்டாவது பொது அவையில் 869ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஏட்ரியனின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இவர் திருத்தந்தை எட்டாம் யோவான் அவர்களால், இத்தாலியின் செர்வேத்ரியின் (Cervetri) ஆயராகவும், உரோமைய திருஅவையில் பொருளாளராகவும், பின்னர், தலைமை திருத்தொண்டராகவும் நியமிக்கப்பட்டு, கான்ஸ்தாந்திநோபிளுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். ஆனால், அங்குள்ள அவைக் கூட்டத்தில் திருத்தந்தையின் கொள்கைகளை உறுதியாக வலியுறுத்தி நின்றதால், இவர் சிறைப்படுத்தப்பட்ட நிலையும் ஏற்பட்டது. இவர் ஆயராக இருந்தபோதே, திருத்தந்தையாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். திருத்தந்தை முதலாம் மரினுஸ் அவர்கள், தன் பணிக்காலத்தில், முந்தைய திருத்தந்தை எட்டாம் யோவானின் வழிகளுள் சிலவற்றைப் பின்பற்றினார், சிலவற்றை விட்டுவிட்டார். எடுத்துக்காட்டாக, உரோமைத் திருஅவையில் அதிகாரிகளிடையே காணப்பட்ட முரண்பாடுகளைக் களைவதற்கென பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். முந்தைய திருத்தந்தையால் கண்டனத்துக்கு உள்ளான Porte ஆயர் Formosusஐ மன்னித்து ஏற்றதோடு, அவர் உரோமுக்கு திரும்புவதற்கும் அனுமதியளித்தார். உரோம் நகரில் வாழ்ந்த ஆங்கிலேயர்களின் தலைமையகமான Schola Anglorum என்பதன் மீது விதிக்கப்பட்டிருந்த வரியை இங்கிலாந்து மன்னர் ஆல்பிரட்டின் வேண்டுகோளுக்கிணங்க விலக்கினார். திருத்தந்தை  முதலாம் மரினுஸ் அவர்கள்,   இரண்டு ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தியபின், 884ம் ஆண்டு மரணமடைந்தபோது, புனித பேதுரு பெருங்கோவிலின் முன்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார். 

திருத்தந்தை மூன்றாம் ஏட்ரியன்

திருத்தந்தை முதலாம் மரினுஸுக்குப்பின் 884ல் தலைமையேற்க வந்தார் திருத்தந்தை புனித மூன்றாம் ஏட்ரியன். இவரைப் பற்றி வரலாற்றில் அதிகமாக இல்லை. பேரரசர் Charles the Fat, தனக்குப்பின் தன் வாரிசுகளுள் யார் ஆள்வது என்பது குறித்து விவாதிக்க கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற வழியில் Modena நகர் அருகே 885ம் ஆண்டு கோடை காலத்தில் காலமானார் திருத்தந்தை மூன்றாம் ஏட்ரியன். இவரின் உடல் அங்கேயே, Nonantula என்ற இடத்தின் துறவு இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரும் ஏறக்குறைய ஓராண்டுதான் திருஅவையை வழிநடத்திச் சென்றார்.

திருத்தந்தை மூன்றாம் ஏட்ரியனுக்குப்பின் வந்தவர் 110வது திருத்தந்தை, நான்காம் ஸ்தேவான். இவர் 5ம் ஸ்தேவான் என்றும் அறியப்படுகிறார். இந்த ஸ்தேவான் பெயர் குழப்பம் குறித்து ஏற்கனவே சில வாரங்களுக்குமுன் விளக்கம் கொடுத்திருந்தோம். இத்திருத்தந்தை குறித்து, வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2021, 12:40