திருத்தந்தை ஒன்பதாம் யோவான் திருத்தந்தை ஒன்பதாம் யோவான் 

திருத்தந்தை Formosus தொடர்புடைய சிக்கல்கள்

இறந்த ஒரு திருத்தந்தையின் உடல் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, மீண்டும் டைபர் நதியில் வீசியெறியப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

896ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி உயிரிழந்த திருத்தந்தை Formosusஐ எப்படியாவது பழிவாங்கவேண்டும் என துடித்துக்கொண்டிருந்த பேரரசர் லாம்பர்ட்டின் தாய் Agiltrude குறித்து கடந்த வாரம் கண்டோம். அவர் திருத்தந்தையை எப்படி பழிவாங்கினார் என்பதை தற்போது நோக்குவோம். திருத்தந்தை Fomosus அவர்கள் உயிரிழந்ததும் பொறுப்பேற்ற  திருத்தந்தை 6ம் Boniface, 15 நாட்களே திருஅவையை வழிநடத்தினார். அடுத்து, இத்தலைமைப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், திருத்தந்தை 6ம் ஸ்தேவான். இப்போது காட்சி மாறியது. 

     ஏற்கெனவே 896ம் ஆண்டு உரோமில் பேரரசராக Arnulf முடிசூட்டிக்கொண்ட போதிலும், 897ம் ஆண்டு துவக்கத்தில் திருத்தந்தை 6ம் ஸ்தேவானின் காலத்தில், உரோம் நகர் மீதான அதிகாரம் மீண்டும் பேரரசர் லாம்பர்ட்டுக்கும் அவர் தாய்க்குமே சென்றது. இவர்கள், திருத்தந்தை 6ம் ஸ்தேவானை தங்கள் வசப்படுத்தி, முன்னாள் திருத்தந்தை Formosusக்கு எதிராக நீதிமன்றம் ஒன்றை கூட்டினார். இதில் திருத்தந்தை 6ம் ஸ்தேவான் நீதிபதியாக அரியணையில் அமர்ந்திருக்க, 9 மாதங்களுக்குப்பின் தோண்டியெடுக்கப்பட்ட திருத்தந்தை Formosusன் உடல், பாப்பிறை உடை அணிவிக்கப்பட்டு இன்னொரு நாற்காலியில் குற்றவாளியாக உட்காரவைக்கப்பட்டது. அவர் பெயரால் பதில் சொல்லும்படி ஒரு திருத்தொண்டர் நியமிக்கப்பட்டார். திருத்தந்தை Formosus மீதான குற்றங்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டது. அதாவது, அவர் திருத்தந்தையாக இருக்க தகுதியற்றவர் என எழுதப்பட்டது. இதனால் இவர் கையால் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர்களின் அதிகாரமும் செல்லாததானது. பின்னர் அந்த இறந்த உடல்மீது போர்த்தப்பட்டிருந்த திருத்தந்தையருக்குரிய ஆடை கிழித்தெறியப்பட்டது. எந்த விரல்களால் அவர் ஆயர்களைத் திருநிலைப்படுத்தினாரோ அந்த மூன்று விரல்களும் துண்டிக்கப்பட்டன. பின்னர் அவரின் உடல் சாதாரண பொதுநிலையினர் உடை உடுத்தப்பட்டு அந்நியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இத்தோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. சில நாட்களில் அவ்வுடல் மீண்டும் தோண்டப்பட்டு டைபர் நதியில் வீசப்பட்டது. இதோடு, முன்னாள் பேரரசர் Guidoவின் மனைவி Agiltrudeன் பழிவாங்கும் எண்ணம் அவரைப் பொறுத்த வரையில் வெற்றிகண்டது.

திருத்தந்தை Formosus அவர்களின் இறந்த உடலை ஆற்றிலிருந்து எடுத்து பாதுகாத்தார் ஒரு துறவி. இந்த 897ம் ஆண்டில் இரண்டு திருத்தந்தையர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தனர். அந்த துறவி காத்த உடல் திருத்தந்தை இரண்டாம் தியோதோர் வசம் கிட்டியது. இவர், திருத்தந்தை Formosusன் உடலை மரியாதையுடன் முறைப்படி புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்தார். இதோடு எல்லாம் முடிந்தது என வரலாற்றுப் புத்தகத்தை மூடமுடியவில்லை. 904ல் பதவிக்கு வந்த திருத்தந்தை மூன்றாம் செர்ஜியுஸ் அவர்கள், முந்தைய திருத்தந்தை ஸ்தேவானின் மன்ற நடவடிக்கைகளை ஆதரித்து, திருத்தந்தை Formosusன் ஆயர் திருநிலைப்பாடுகள் செல்லாது என அறிவித்தார். அதாவது அத்திருத்தந்தையின் கையால் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர்கள் மீண்டும் திருநிலைப்படுத்தப்பட்டால்தான் ஆயர்களாக பணியாற்ற முடியும் என்றார். ஆனால் இது தீர்ப்பாக முடியவில்லை. குழப்பம் தான் அதிகரித்தது. அதாவது, திருத்தந்தை Formosus அவர்களால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டவர், ஆயர் இல்லையென்று இன்று கூறினால், அந்த ஆயரால் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடும் செல்லாது தானே. இதனரல் திருஅவைக்குள் குழப்பமே மிஞ்சியது. இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் எண்ணற்ற புத்தகங்கனை எழுதியுள்ளனர்.

திருத்தந்தை ரொமானுஸ்

திருத்தந்தை 6ம்(7) ஸ்தேவானுக்குப்பின் திருஅவையின் 114வது திருத்தந்தையாகப் பதவியேற்றவர் திருத்தந்தை ரொமானுஸ். இவரைப்பற்றி வரலாற்றில் அதிகமாக குறிக்கப்பட்டிருக்கவில்லை. 897ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இவர் திருத்தந்தையாயிருக்கலாம் என நம்பப்படுகிறது.; 4 மாதங்களே இவர் திருஅவையை வழிநடத்தினார். இவரைப்பற்றிய குறிப்பில், இவர் துறவியாக்கப்பட்டார் என எழுதப்பட்டுள்ளது. அந்த கால இக்குறியின் அர்த்தம் என்னவெனில், இவர் திருத்தந்தை பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதேயாகும். ஏதாவது ஒரு பிரிவு இவரை திருத்தந்தை பதவியிலிருந்து தூக்கியெறிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

திருத்தந்தை ரொமானுஸ்க்குப்பின் பொறுப்பேற்றவர் திருத்தந்தை இரண்டாம் தியோதோர். 897ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் பதவி வகித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவரைப்பற்றியும் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமில்லை. இவர் 20 நாட்களே வழிநடத்தினார். இருப்பினும் 20 நாட்கனில் மிகப்பெரிய செயல்களை ஆற்றியுள்ளார். திருத்தந்தை 6ம்(7) ஸ்தேவனால் பதவி நீக்கம் செய்யப்பட திருஅவை அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி வழங்கினார். திருத்தந்தை Formosusஆல் நிறைவேற்றப்பட்ட திருநிலைப்பாடுகள் செல்லும் என்றார். இவர் உரோம் மறைமாவட்டத்தின் அனைத்து அருள்பணியாளர்களாலும் அன்பு செய்யப்பட்ட ஒரு திருத்தந்தை என வரலாறு கூறுகிறது.

இத்திருத்தந்தைக்குப்பின் 898ம் ஆண்டின் துவக்கத்தில் வந்திருந்த ஒன்பதாம் யோவானும் திருத்தந்தை Formosusன் திருநிலைப்பாடுகள் செல்லும் என அறிவித்து, ஏற்கனவே ஆயர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் அமர்த்தினார். இவர், முதலில் பெனடிக்டன் துறவு சபையில் இணைந்து, திருத்தந்தை Formosusஆல் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டவர்.

திருத்தந்தை ஒன்பதாம் யோவான்

திருத்தந்தை ஒன்பதாம் யோவான், திருஅவையில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். அக்காலத்தில் ஆயர்களோ அல்லது திருத்தந்தையோ இறந்தவுடன் அவர்களின் உடைமைகளை உடனே அவரின் உடன் அதிகாரிகள் புகுந்து கொள்ளையடிக்கும் பழக்கம் இருந்தது. அதனை வன்மையாக கண்டித்துச் சட்டங்களைக் கொணர்ந்தார் திருத்தந்தை ஒன்பாதம் யோவான். ஜெர்மானிய திருஅவையின் கீழ் இருந்த Moravia திருஅவைக்கு  தனி ஆயர்களும், அதிகாரிகளும் வேண்டும் என கேட்டபோது, ஜெர்மானியத் திருஅவையின் அச்சுறுத்தலுக்கு செவிசாய்க்காமல் 3 ஆயர்களையும் ஒரு பேராயரையும் நியமித்தார் இத்திருத்தந்தை ஒன்பதாம் யோவான். இவர் கீழிருந்த உரோமையில் அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் பேரரசர் லாம்பர்ட்டின் பெயருடன் இத்திருத்தந்தையின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது.

      திருத்தந்தை ஒன்பதாம் யோவான், 900மாம் ஆண்டின் துவக்கத்தில் உயிரிழந்தபோது, பதவிக்கு வந்தார் திருத்தந்தை 4ம் பெனடிக்ட்.   மூன்று ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திய 117வது, இத்திருத்தந்தை குறித்து, வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2021, 13:53