திருத்தந்தை Formosus திருத்தந்தை Formosus 

திருத்தந்தையர் வரலாறு: திருத்தந்தை Formosusன் காலம்

திருத்தந்தை 5ம் ஸ்தேவான், உரோம் நகரில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் தந்தையின் சொத்துக்களை விற்று மக்களுக்கு உணவூட்டினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

885ம் ஆண்டு திருஅவையின் 110வது திருத்தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டார் திருத்தந்தை 5ம் ஸ்தேவான். இவரின் காலத்திலேயே அரசியல் குழப்பங்களும், அச்சுறுத்தல்களும் அதிகம் அதிகமாகத் துவங்கிவிட்டன. இத்தாலியின் Spoleto பகுதி குறுநில சிற்றரசர் அல்லது பிரபு Guido என்பவர் அப்பகுதியின் மன்னர் Berangarடன் போராடி வெற்றிகண்டார். ஆகவே Guidoதான் பேரரசராக முடிசூட்டப்படவேண்டும். அதனால் அவரைப் பேரரசராக முடிசூட்டினார் திருத்தந்தை 5ம் ஸ்தேவான். திருத்தந்தை 5ம் ஸ்தேவான், உரோம் நகரில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் தந்தையின் சொத்துக்களை விற்று மக்களுக்கு உணவூட்டினார். திருத்தந்தை 5ம் ஸ்தேவான் 891ம் ஆண்டு உயிரிழந்தபோது, அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை Formosus.

திருத்தந்தை Formosus

திருத்தந்தையர் வரலாற்றை தொடர்ந்து கேட்டு வருபவர்களுக்குத் தெரியும.; இவர்தான் முதலில் Portoவின் பேராயராக இருந்தபோது திருத்தந்தையின் கோபத்திற்கு உள்ளாக வேண்டாம் என, பல உயர் அதிகாரிகளுடன், சொல்லாமல் கொள்ளாமல் மறைமாவட்டத்தைவிட்டே தலைமறைவானார். பின்னர் Porto மறைமாவட்டமே திருப்பி வழங்கப்பட்டதும் நடந்தது. அம்மறைமாவட்டத்திற்கு கர்தினாலாக இருந்த இவர்தான் திருத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதுவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஏற்கனவே திருச்சபை விரும்பாத Guido, பேரரசராக திருத்தந்தையால் முடிசூட்டப்பட்டாகி விட்டது. புதிய திருத்தந்தை Formosus அவர்களும் அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதுமட்டுமல்ல Guidoவின் மகன் Lambert ஐ 892ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உரோம் பேரரசராக முடிசூட்டப்படவேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாக்கப்பட்டார். உரோம் பகுதியின் ஆட்சித் தலைவராகவும், உலக கத்தோலிக்கரின் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த திருத்தந்தைக்கு பேரரசர் Guido விடமிருந்து அச்சுறுத்தல் வரத்தொடங்கியது. உரோமை ஆக்ரமிக்கும் நோக்குடன் எல்லாப் பகுதிகளையும் கைப்பற்றிவிட்டு, உரோம் நகர் சுற்றுச் சுவர் வரை வந்துவிட்டார் Guido. இந்த நேரத்தில் உதவிகேட்டு, அதுவும் இரகசியமாக ஆள் அனுப்பி, பேரரசர் Arnulfஐ அணுகினார் திருத்தந்தை Formosus. இத்தாலியை Guidoவிடமிருந்து விடுவிக்கவேண்டும் என்பது திருத்தந்தையின் விருப்பம். 894ம் ஆண்டு Arnulfம் படையெடுத்து வந்தார். இத்தாலியின் பெரிய நதியான Poவிற்கு வடக்கில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார். அதே ஆண்டு டிசம்பரில் பேரரசர் Guido மரணமடைய,  திருத்தந்தை Formous ஆல் எற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேரரசராக முடிசூடப்பட்டிருந்த Guidoவின் மகன் Lambert, தற்போது அவரின் தாய் Agiltrudeன் கண்காணிப்பில் வந்தார். தன் கணவனை எதிர்த்துப் போரிட பேரரசர் Arnulfஐ, திருத்தந்தை Formosus வரவழைத்தார் என்ற எண்ணமே Agiltrudeன் மனதில் வஞ்சத்தை வளர்த்தது.

894ம் ஆண்டு இத்தாலியின் வடபகுதிகளைக் கைப்பற்றிய பேரரசர் Arnulf, 896ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உரோம் எல்லைச் சுவர்கள் வரை வந்துவிட்டார். இளம் வயதுடைய பேரரசர் Lambertinன் தாய் Agiltrudeன் படைகள் பேரரசர் Arnulfஐ உரோம் நகருக்குள் நுழையாவண்ணம் தடுத்து நின்றன. ஆனால் Arnulf தடைகளைத் தாண்டி உரோம் நகருக்குள் வந்து, இத்தாலியின் பேரரசராக திருத்தந்தை Formosus ஆல் முடிசூட்டப்பட்டார். அடுத்து உரோமையப் புதிய பேரரசர் Arnulf, lamabert ஐயும், அவர் தாயையும் முறியடிக்க எண்ணம் கொண்டு Spoletoவை நோக்கி தன் படைகளைத் திருப்பினார். ஏற்கெனவே கோபத்தில் இருந்த  Agiltrude, Arnulfஐ திருத்தந்தை பேரரசராக முடிசூட்டியதும் கோபத்தின் உச்சத்திற்கேச் சென்றார். பேரரசர் Arnulfஐ முறியடிப்பதைவிட, திருத்தந்தை Formosusஐ பழிவாங்க வேண்டும் என்பதே அவரின் முதல் நோக்கமாக இருந்தது. அதற்கு உதவுவது போல் சில நிகழ்வுகளும் நடந்தன. ஆம், Spoletoவை நோக்கி சென்றுகொண்டிருந்த பேரரசர் Arnulf, திடீரென்று பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு. எள்ளளவும் முன்னேற முடியாதவராய் பின்வாங்க வேண்டியதாகியது. இந்த நேரத்தில் 896ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி திருத்தந்தை Formosusம் காலமானார். அதற்குப்பின் வந்த திருத்தந்தை 6ம் Boniface 15 நாட்களே பதவியிலிருந்தார். திருத்தந்தை Formosus  இறந்துவிட்டாலும், பேரரசர் Lambertன் தாய் Agiltrudeன் பழிவாங்கும் எண்ணம் மட்டும் கடுகளவும் குறையவில்லை. திருத்தந்தையின் இறந்த உடல் எவ்வகையில் அவமானப்படுத்தப்பட்டது என்பது குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2021, 13:10