ஒரு தம்பதி ஒரு தம்பதி 

மகிழ்வின் மந்திரம்: திருமணத்தின் பாலுணர்வு சார்ந்த பரிமாணம்

பாலுணர்வின் முக்கியத்துவத்தை திருஅவை மறுக்கிறது என்ற குற்றச்சாட்டை புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வன்மையாக மறுத்து ஒதுக்கியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் நான்காம் பிரிவில், “திருமணத்தின் பாலுணர்வு சார்ந்த பரிமாணம்” என்ற தலைப்பில் (பத்திகள்:150,151,152)  கூறியுள்ள கருத்துக்கள்...

திருமணத்தின் பாலுணர்வு சார்ந்த பரிமாணம் குறித்து சிந்திப்போம். பாலுணர்வை இறைவனே படைத்தார் என்பது மட்டுமல்ல, படைப்புக்களுக்கு அதை வியத்தகு கொடையாகவும் வழங்கியுள்ளார். இக்கொடையின் உண்மையான மதிப்பு சீர்குலையாயாதிருக்க, அது வளப்படுத்தப்பட்டு, சரியான இலக்கு நோக்கி வழிநடத்தப்பட வேண்டும். பாலுணர்வின் முக்கியத்துவத்தை திருஅவை மறுக்கிறது எனவும், பாலுணர்வு என்பது இனப்பெருக்கத்திற்கு அவசியம் என்பதால் திருஅவை அதனை சகித்துக்கொள்கிறது எனவும் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் வன்மையாக மறுத்து ஒதுக்கியுள்ளார். பாலுணர்வு என்பது கீழ்த்தரமானதென கருதப்படுவதோ, அதன் தேவை குறித்து கேள்வியெழுப்புவதோ, தேவையற்றது. உணர்வுகளையும், பாலுணர்ச்சிகளையும் குறித்த சரியான பயிற்சி என்பது, பாலுணர்வு தொடர்பான அன்பின் தன்னிச்சையான இயல்பை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என அஞ்சுபவர்களுக்கு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் கூறும் பதில் இதுதான்.  'தங்கள் உறவுகளில் முழுமையான, முதிர்ச்சி நிறைந்த, தன்னிச்சையான இயல்புக்கு ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறார்கள். இதுவே, ஒவ்வொருவர் இதயத்திலும் எழும் உணர்வுகளை பகுத்தறிவதில், படிப்படியாக பெறப்படும் கனி எனும் முதிர்ச்சியாகும்', என்கிறார் அப்புனித திருத்தந்தை. இதற்கு, ஒழுக்க மதிப்பீடுகளும், தன்னையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் தேவைப்படுகின்றன, ஏனெனில், ஒவ்வொருவரும் தங்கள் உடலின் அர்த்தம் குறித்து கற்க வேண்டியுள்ளது. பாலுணர்ச்சி என்பது பொழுதுபோக்கிற்கோ, தன்னிறைவு அடைவதற்கோ உரிய வழி அல்ல, மாறாக, ஒருவர் மற்றவரை அவருக்கே உரிய புனிதமான, மீறமுடியாத மாண்புடன் ஏற்று பரிமாறிக்கொள்ளும் மொழியாகும். இவ்வாறு, மனித இதயம், இன்னொரு வகையான தன்னிச்சையான இயல்பில் பங்குபெற வருகிறது. இச்சூழலில், குறிப்பாக, சிற்றின்பம், அல்லது பாலுணர்ச்சி என்பது, பாலுணர்வு குறித்து மனிதரால் வெளிப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நம் உடலின் திருமணம் சார்ந்த அர்த்தத்தையும், உடல் எனும் கொடையின் உண்மையான மாண்பையும் கண்டுகொள்ள இது உதவுகிறது. உடலின் இறையியல் கூறுகள் குறித்த தன்  மறைக்கல்வியில்:  ‘பாலின வேறுபாடு என்பது, பலனளித்தல் மற்றும் இனப்பெருக்கத்தின் ஆதாரமாக இருப்பது மட்டுமல்ல, மனிதன் தன்னையே கொடையாக வழங்கும் அன்பை வெளிப்படுத்தும் திறனையும் தன்னுள் கொண்டுள்ளது’ என்று, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் கூறுகிறார். ஆரோக்கியமான பாலுணர்ச்சி, இன்பத்தை தேடுதலோடு தொடர்புடையதென்றாலும், அது வியத்தகு உணர்வுகளைக் கொண்டுள்ளதாகவும், அதேவேளை, வேட்கைகளை மனிதாபிமானப்படுத்துவதாகவும் மாறமுடியும். ஆகவே, எவ்வகையிலும், சிற்றின்பம் என்ற பரிமாணத்தை, அனுமதிக்கப்பட்ட தீயது என்றோ, குடும்பத்தின் நன்மைக்காக சகித்துக் கொள்ளப்படும் ஒரு சுமை என்றோ, நோக்கக்கூடாது. மாறாக, தம்பதியரிடையே நல்ல உறவை வளப்படுத்தும் இறைவனின் கொடையாக அது நோக்கப்படவேண்டும்.  மற்றவரின் மாண்பிற்கு வழங்கப்படும் மதிப்புடன் கூடிய அன்பால், நம் உணர்ச்சிகள் புது உரு பெறும்போது, அது கள்ளம் கபடமற்ற, கலப்படமற்ற உறுதிப்பாடாக மாறி, மனித இதயத்தின் திறன் குறித்த அற்புதங்களை வெளிப்படுத்துகின்றது. இவ்வகையில், வாழ்வு என்பது நன்மையானதாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் மாறியுள்ளது என்பதை, கணப்பொழுதாகிலும், நம்மால் உணரமுடியும். (அன்பின் மகிழ்வு 150, 151, 152.)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2021, 14:45