தேடுதல்

இஸ்ரேல் பெண் அமைதி ஆர்வலர்கள் இஸ்ரேல் பெண் அமைதி ஆர்வலர்கள் 

ஜூன் 27, மத்தியக் கிழக்கில் அமைதி நிலவ செபிக்கும் நாள்

இம்மாதம் 27, ஞாயிறன்று, நாசரேத், இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்ட பெருங்கோவிலில், நிறைவேற்றப்படும் திருப்பலியில், "மத்தியக் கிழக்கில் அமைதி” என்ற நாள் முதன் முதலில் சிறப்பிக்கப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"கிழக்கிற்கு அமைதி" என்ற ஒரு நாளை உருவாக்கியிருப்பதோடு, அப்பகுதி, நாசரேத்து திருக்குடும்பத்திடம் அர்ப்பணிக்கப்படும் என்று, ஜூன் 14, இத்திங்களன்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பேராயர் பியெர்பத்திஸ்தா பித்ஸபல்லா (Pierbattista Pizzaballa) அவர்கள் அறிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும், "கிழக்கிற்கு அமைதி நாள்" என்ற தலைப்பில், சிறப்புத் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு, மத்தியக் கிழக்குப் பகுதியில், கடவுள், தம் அமைதி மற்றும், இரக்கத்தை அருளுமாறு இறைவேண்டல்கள் எழுப்பப்படும் என்று, புனித பூமியின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் கூட்டத்தில், அப்பேரவையின் தலைவரான, பேராயர் பித்ஸபல்லா அவர்கள் அறிவித்துள்ளார்.  

2021ம் ஆண்டு, புனித யோசேப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய   பேராயர் பித்ஸபல்லா அவர்கள், நாசரேத், இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்ட பெருங்கோவிலில், இவ்வாண்டு ஜூன் 27, ஞாயிறன்று, நிறைவேற்றப்படும்  திருப்பலியில், "மத்தியக் கிழக்கில் அமைதி” என்ற நாள் முதன் முதலில் சிறப்பிக்கப்படும் என்றும்,  அத்திருப்பலியில், மத்தியக் கிழக்குப் பகுதி, சிறப்பான முறையில், திருக்கடும்பத்திற்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், இந்த முதல் அமைதி நாள் பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, பேராயர் பித்ஸபல்லா அவர்கள், நாசரேத், இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்ட பெருங்கோவிலில் வைப்பதற்கென்று வரையப்பட்டுள்ள திருக்குடும்பப் படம், இத்திருப்பலியின் இறுதியில் ஆசிர்வதிக்கப்பட்டு, மத்தியக் கிழக்கின் அனைத்து நாடுகளுக்கும் பவனியாக எடுத்துச்செல்லப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

லெபனான் நாடு தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச்செல்லப்படும் இப்படம், இறுதியில், புனித யோசேப்பு ஆண்டு முடிவடைகின்ற, வருகிற டிசம்பர் 8ம் தேதியன்று உரோம் நகரைச் சென்றடையும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், “கிழக்கிற்கு அமைதி நாளு”க்கென்று வரையப்பட்ட அப்படத்தை ஆசிர்வதிப்பார் என்றும், பேராயர் பித்ஸபல்லா அவர்கள் கூறியுள்ளார்.

“கிழக்கிற்கு அமைதி நாள், 2021ம் ஆண்டு ஜூன் 27ம் தேதியன்று சிறப்பிக்கப்படும். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2021, 15:12