மனித வர்த்தகத்திற்குப் பலியாகியுள்ள பெண் மனித வர்த்தகத்திற்குப் பலியாகியுள்ள பெண் 

மனித வர்த்தகர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட...

இந்தோனேசியாவின் கிழக்கு Nusa Tenggara மாநிலத்தில், கடந்த வாரத்தில், நான்கு இரவு விடுதிகளிலிருந்து, 14 வயது முதல், 17 வயதுக்குட்பட்ட பாலியல் அடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவில், நான்கு இரவு விடுதிகளிலிருந்து, 17 வயதுக்குட்பட்ட பாலியல் அடிமைகள், அண்மையில் மீட்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எதிரான தங்களின் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர், தலத்திருஅவைப் பணியாளர்கள்.

இந்தோனேசியாவின் கிழக்கு Nusa Tenggara மாநிலத்தில், கடந்த வாரத்தில் நான்கு இரவு விடுதிகளிலிருந்து, 14 வயது முதல், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய அப்பகுதியின் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும், அந்த விடுதிகளின் நிர்வாகிகள், மற்றும், உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கூறினர்.

மேற்கு ஜாவாவில், மனித வர்த்தகர்களால், பாலியல் அடிமைகள் போன்று வைக்கப்பட்டிருந்த இச்சிறுமிகளில் ஒருவரின் பெற்றோர் காவல்துறைக்கு அளித்த புகாரின்பேரில், அச்சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டு, தற்போது, மனிதாபிமானம் (TRUK-F) என்ற அமைப்பினரின் கண்காணிப்பில் உள்ளனர்.             

மனிதாபிமானம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள்சகோதரி Eusthocia Monika Nata அவர்கள் கூறுகையில், காவல்துறை, மனிதவர்த்தகச் சட்டத்தைப் பயன்படுத்துவதன் வழியாக, இந்த குற்றவாளிகள், கடுமையான தண்டனைகளையும், பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடு தொகையையும் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

காவல்துறை, இத்தகைய குற்றவாளிகள்மீது விசாரணைகளை முடுக்கிவிடுவது கிடையாது என்றும், இச்சிறுமிகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், இச்சிறுமிகளில் இருவர், கருவுற்றுள்ளனர் என்றும், அருள்சகோதரி Eusthocia அவர்கள் கூறியுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2021, 15:15