குரவேசியா நாட்டில் கருக்கலைத்தலுக்கு எதிரான ஊர்வலம் குரவேசியா நாட்டில் கருக்கலைத்தலுக்கு எதிரான ஊர்வலம்  

கருவில் வளரும் குழந்தையின் உரிமையை மறுக்கும் அறிக்கை

ஐரோப்பிய ஆயர்கள் : கருக்கலைத்தல் என்பது, குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவோ, சாதாரண நலச்சேவையாகவோ மாறிவிடக்கூடாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருக்கலைத்தல் என்பது, அடிப்படையான நலச்சேவை என்றும், அடிப்படை மனித உரிமை என்றும் காரணம் காட்டி, கருக்கலைத்தல் குறித்த Matic  அறிக்கையை, ஜூன் 23ம் தேதி, புதனன்று, ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு திட்டமாக ஏற்றுக்கொள்ளவிருப்பதைக் குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.

கருவில் வளரும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை மறந்து, கருக்கலைத்தலை, ஒரு பெண்ணிற்குரிய நலச்சேவையாகவும், உரிமையாகவும் மட்டும் நோக்க அழைப்பு விடுக்கும் Matic அறிக்கை, ஒரு பக்க சார்புடையதாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று, ஆயர்கள், குறை கூறியுள்ளனர்.

கருவில் வளரும் குழந்தை, தான் பாதுகாக்கப்படுவதற்கும், வாழ்வதற்குமான உரிமையை  கொண்டிருப்பதால், கருக்கலைத்தல் என்பது, குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவோ, சாதாரண நலச்சேவையாகவோ மாறிவிடக்கூடாது, எனவும் தங்கள் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர், ஐரோப்பிய ஆயர்கள்.

கருக்கலைத்தலுக்குரிய மனித உரிமை என்பது, எந்த அனைத்துலக மனித உரிமை சட்டத்திலோ, அனைத்துலக ஒப்பந்தத்திலோ ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் ஆயர்கள், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தினர் நாடுகளுக்கு இந்த உரிமையை கட்டாயமாக புகுத்துவது, தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குரவேசியா நாட்டு அங்கத்தினர் Predrag Matić என்பவரால் முன்வைக்கப்பட்டு, அவர் பெயராலேயே அழைக்கப்படும், இந்த கருக்கலைத்தல் குறித்த அறிக்கை, கருக்கலைத்தலை ஒரு நலச்சேவையாக கொணர முயல்வதால், மனச்சான்றின்படி செயல்பட முனைந்து, இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் மருத்துவப் பணியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கத்தோலிக்க ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஓர் உரிமையை வலியுறுத்திக் கூறும்போது, அதனோடு தொடர்புடைய மற்ற அனைத்து உரிமைகளின் சட்டரீதியான, மற்றும் அறநெறி சார்ந்த சமநிலை காப்பாற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் தங்கள் அறிக்கையில் விடுத்துள்ளனர், ஐரோப்பிய ஆயர்கள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2021, 14:53