ஆங்கில கால்வாய் செல்ல முயன்ற குடிபெயர்ந்தோரை சூழ்ந்து நிற்கும் பிரான்ஸ் நாட்டு துறையினர் ஆங்கில கால்வாய் செல்ல முயன்ற குடிபெயர்ந்தோரை சூழ்ந்து நிற்கும் பிரான்ஸ் நாட்டு துறையினர் 

குடிபெயர்ந்தோர் மாண்புடன் நடத்தப்பட ஆயர்களின் விண்ணப்பம்

இங்கிலாந்திற்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையே அமைந்துள்ள ஆங்கில கால்வாய் வழியே பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை இரு நாடுகளும் மனிதாபிமானத்தோடு நடத்தவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இங்கிலாந்திற்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையே தொடர்புப் பாதையாக அமைந்துள்ள ஆங்கில கால்வாய் வழியே பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை இரு நாடுகளும் மனிதாபிமானத்தோடு நடத்தவேண்டும் என்று, இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாட்டு ஆயர்கள் தங்கள் அரசுகளுக்கு விண்ணப்பங்களை விடுத்துள்ளனர்.

சரியான ஆவணங்கள் இன்றி, நலிவுற்ற நிலையில், இங்கிலாந்து, அல்லது பிரான்ஸ் நாட்டின் கரைகளை வந்துசேரும் மக்கள், மனிதாபிமான முறையில் நடத்தப்படவேண்டும் என்று, கத்தோலிக்க, மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஜூன் 20, கடந்த ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் உலகநாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, ஆயர்கள் வெளியிட்டுள்ள ஒரு விண்ணப்ப மடலில், தங்கள் நாடுகளின் கரைகளை அடைவோர், எந்த நாட்டவராயினும், அவர்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படை மாண்பு முதலில் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

ஆங்கில கால்வாய் பிரான்ஸ் நாட்டுடன் இணையும் இடத்தில் அமைந்துள்ள Calais என்ற நகரில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்கள், வசதிகள் ஏதுமின்றி இருப்பதால், 2020ம் ஆண்டு மட்டும், ஆங்கில கால்வாய் வழியே தப்பித்துச் செல்ல முயன்றோரின் எண்ணிக்கை 10,000த்திற்கும் அதிகம் என்றும், இந்த எண்ணிக்கை, 2019ம் ஆண்டைக்காட்டிலும் நான்கு மடங்கு கூடுதல் என்றும், காவல்துறையினரின் அறிக்கை கூறுகிறது.

ஜூன் 19ம் தேதி, சனிக்கிழமை, பிரான்ஸ் நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு செல்ல ஆங்கில கால்வாய் வழியே முயன்ற 80 குடிபெயர்ந்தோரை, பிரான்ஸ் நாட்டு காவல் துறையினர், நீரிலிருந்து மீட்டதைத் தொடர்ந்து, ஆயர்களின் விண்ணப்பம் விடுக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2021, 15:23