வியட்நாமில் இன்றைய நிலை வியட்நாமில் இன்றைய நிலை 

வியட்நாமிற்காக இறைவேண்டல், பிறரன்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு

தலத்திருஅவை அதிகாரிகள் பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், மக்களுக்குத் தேவையான பணிகளை தொடர்ந்து ஆற்றிவருகிறது, வியட்நாம் தலத்திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகின் பல நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு குறைந்து வரும்நிலையில், வியட்நாம் நாட்டில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, தலத்திருஅவையின் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வியட்நாம் நாட்டு மக்கள் அனைவரும் நாட்டிற்காக இறைவேண்டல் செய்வதுடன், பிறரன்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்துள்ள வியட்நாம் தலத்திருஅவை அதிகாரிகள், அதிக உதவி தேவைப்படும் மக்களுக்கு உணவு விநியோகம் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கழிவுகளை அகற்றுவோர், முதியோர், நோயுற்றோர், மற்றும் ஏழ்மைப்பகுதிகளில் வாழ்வோருக்குத் தேவையான உதவிகளை, தாராளமனதுடைய செல்வந்தர்களின் ஆதரவுடன் ஏற்று நடத்திவருவதாக வியட்நாம் தலத்திருஅவையின் அருள்பணி Joseph Đinh Văn Thọ அவர்கள் கூறினார்.

ஒவ்வொரு ஏழை குடுமபத்திற்கும், உணவுப் பொட்டலங்களையும், அரிசியையும், தேவையான ஏனைய சமையல் பொருட்களையும் வழங்கும் தலத்திருஅவை அதிகாரிகள், மின், மற்றும் நீர் கட்டணங்களைச் செலுத்த முடியாதவர்கள், மற்றும் மருந்துகளை வாங்க முடியாதவர்களுக்கு சிறு நிதியுதவிகளை வழங்கிவருகின்றனர்.

தலத்திருஅவை அதிகாரிகள் பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், மக்களுக்கு, உணவு மற்றும் முகக் கவசங்களை வழங்கும் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறது, வியட்நாம் தலத்திருஅவை.

ஆசியாவில், பிலிப்பீன்ஸ், இந்தியா, சீனா, மற்றும் இந்தோனேசியாவிற்கு அடுத்து, அதிக அளவில் கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள வியட்நாமில், 27 மறைமாவட்டங்களுடன் இணைந்த 2,200 பங்குதளங்களில், 2500க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வியட்நாம் நாட்டில், 70 இலட்சம் கத்தோலிக்கர், அதாவது, மொத்த மக்கள் தொகையில் 7 விழுக்காட்டினர், கத்தோலிக்கராக உள்ளனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2021, 13:57