பாகிஸ்தான் இரயில்  விபத்து பாகிஸ்தான் இரயில் விபத்து 

பாகிஸ்தான் இரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு செபம்

பாகிஸ்தானின் இரயில் அமைப்பு 165 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையுடையது. 2012ம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 727 இரயில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் இரு பயணிகள் இரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளவேளை, இந்த விபத்துக்கு அரசைக் குறை கூறியுள்ளனர், அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள்.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில், சூன் 07, இத்திங்கள் உள்ளூர் நேரம் அதிகாலை 3.30 மணிக்கு, Sir Syed எக்ஸ்பிரஸ், Millat எக்ஸ்பிரஸ் ஆகிய இரு பயணிகள் இரயில்கள், மோதிக்கொண்டதில், அவற்றில் பயணம் மேற்கொண்டிருந்த 1,200 பேரில், 51 பேர் இறந்துள்ளனர், மற்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த பெரும் விபத்து குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, பாகிஸ்தான் கிறிஸ்தவத் தலைவர்கள், இரயில் தண்டவாளங்களைச் சரியாக அமைப்பதில், அரசு கவனமின்றி இருந்ததே இதற்குக் காரணம் என்று, அரசை குறை கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருஅவையின் நீதி மற்றும், அமைதி அவையின் தேசிய ஒருங்கிணைப்பாளரான Kashif Aslam அவர்கள் கூறுகையில், இந்த இரயில்களில் பயணம் மேற்கொண்டவர்களில் பலர், ஏழைகள் என்றும், இந்த விபத்துக்கு நன்னெறி விதிமுறைப்படி, யாராவது பொறுப்பேற்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் இரயில் அமைப்பு 165 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையுடையது. அந்நாட்டில் 2012ம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 727 இரயில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2021, 14:49