கானா குடியரசு ஆயர்கள் கானா குடியரசு ஆயர்கள் 

சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட, பிரிட்டன், கானா ஆயர்கள்

உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உள்ளடக்கிய வருங்காலத்தையும், வறிய மக்களின் வளமையான வருங்காலத்தையும் மனதில் கொண்ட முடிவுகள் எடுக்கப்பட G7 நாடுகளுக்கு விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 11, இவ்வெள்ளி முதல், ஞாயிறு வரை G7 நாடுகளின் தலைவர்கள், இங்கிலாந்தில் மேற்கொள்ளும் மூன்று நாள் கூட்டத்தில், உலகம் முழுமையின் நீடித்த, நிலைத்த வருங்காலத்தை மனதில்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பதை வலியுறுத்துமாறு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு, விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர், பிரித்தானிய ஆயர்கள்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு என்ற G7 குழுவின் இவ்வாண்டு தலைமைப் பதவியை ஏற்றிருக்கும் பிரிட்டன், உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உள்ளடக்கிய வருங்காலத்தையும், வறிய மக்களின் வளமையான வருங்காலத்தையும் மனதில்கொண்ட முடிவுகள் இந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்பட வேண்டுமென ஏனைய நாடுகளை வலியுறுத்துமாறு பிரதமரிடம் விண்ணப்பித்துள்ளனர் பிரித்தானிய ஆயர்கள்.

இன்று உலகம் எதிர்கொள்ளும் சமூக, மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் நெருக்கடிகளோடு நெருங்கிய தொடர்புடையவை என்பதை வலியுறுத்தும் ஆயர்கள், தொழில்நுட்ப, மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தியப் போட்டியில், மக்களை சுரண்டியுள்ளதோடு, உலக வளங்களையும் அரசுகள் சேதப்படுத்தியுள்ளன என்பதை, தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட, ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள, ‘Laudato si’ திருமடலின் ஏழாண்டு செயல்திட்டத்திற்கு பதலளிக்கும் விதமாக, இவ்வாண்டு, பத்து இலட்சம் மரங்களை நட உள்ளதாக, கானா நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டின் மழைக்காலத்தின்போது, மேற்கு ஆப்ரிக்காவின் கானா குடியரசில், தலத்திருஅவையால், 10 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ள திட்டம், திருத்தந்தையின் ‘Laudato si’ ஏழாண்டு செயல்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி என அறிவித்த அந்நாட்டு ஆயர்கள், இவ்வாண்டில், 50 இலட்சம் மரக்கன்றுகளை நட, கானா அரசு, ஏப்ரல் மாதம் அறிவித்துள்ளதற்கும், இந்த திருஅவை திட்டம் உதவுவதாக இருக்கும் என ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2021, 13:47