எப்போதும் ஒரு மகனாக, மகளாக.... எப்போதும் ஒரு மகனாக, மகளாக.... 

மகிழ்வின் மந்திரம் : எப்போதுமே, ஒரு மகனாக, மகளாக…

ஒருவர் முதிர்ந்த வயதை அடைந்தாலும், ஒருவர் பெற்றோர் நிலையை அடைந்தாலும், இவை அனைத்திற்கும் அடித்தளமாக, அவர் இன்னும் ஒரு குழந்தை என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

9 பிரிவுகளைக் கொண்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரைமடலின் மையப்பகுதியாக அமைந்துள்ள 5ம் பிரிவை, புதிய வாழ்வை வரவேற்பது, கனிநிறைப் பண்பை விரிவாக்குதல், பரந்து விரிந்த குடும்பத்தில் வாழ்வு என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்து, தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ‘பரந்துவிரிந்த குடும்பத்தில் வாழ்வு’ என்ற மூன்றாம் பகுதியில், நாம் வயதில் வளர்ந்தாலும், பெற்றோராக மாறினாலும், நாம் எப்போதுமே, ஒரு மகனாக, மகளாக இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது என்று, திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்:

நம் பெற்றோரை எண்ணிப்பார்ப்போம். ஒருவர் தன் பெற்றோரை ஆதரவின்றி விடுவது, கடவுளின் சட்டத்திற்கு எதிரானது என்று, இயேசு பரிசேயரிடம் கூறினார் (காண்க. மாற்கு 7:8-13). நாம் ஒவ்வொருவரும் ஒரு மகன் அல்லது ஒரு மகள் என்பதை நினைவில் வைத்திருப்பது மேலானது.

இவ்வாறு இந்த எண்ணத்தை அறிமுகப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, குடும்பத்தை மையப்படுத்தி, 2015ம் ஆண்டு, வழங்கிவந்த புதன் மறைக்கல்வி உரைத்தொடரில், ‘குழந்தைகள்’ என்ற தலைப்பில், ஒரு புதனன்று கூறிய சில அழகிய எண்ணங்களை, இப்பகுதியில் மேற்கோளாக வழங்கியுள்ளார்:

"ஒருவர் வயதில் வளர்ச்சி பெற்றாலும், அல்லது, முதிர்ந்த வயதை அடைந்தாலும், ஒருவர் பெற்றோர் நிலையை அடைந்தாலும், ஒருவர் பொறுப்பான பதவியையோ பொறுப்பையோ பெற்றிருந்தாலும், இவை அனைத்திற்கும் அடித்தளமாக, அவர் இன்னும் ஒரு குழந்தை என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கிறார். நாம் அனைவரும் மகன்கள், மகள்கள். இது, ஒரு முக்கிய உண்மையை எப்போதும் நம் நினைவுக்குக் கொணர்கிறது. அதாவது, நாம், வாழ்வை, நமக்கு நாமே வழங்கிக்கொள்ளவில்லை, அதைப் பெற்றுக்கொண்டோம் என்பதே, அந்த உண்மை. வாழ்வு என்ற மாபெரும் கொடையே, நாம் பெற்றுக்கொண்ட முதல் கொடை." (2015, மார்ச் 18 - புதன் மறைக்கல்வி உரை) (அன்பின் மகிழ்வு 188)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2021, 15:51