கூட்டுக் குடும்பம் கூட்டுக் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: உறவுகளை விரிவாக்குவதால் கிடைக்கும் பலன்கள்

இரத்த உறவுகள், மற்றும், அடுத்திருப்பவரோடு உறவுகளைக் குறைத்து தனிமைப்படுத்தி வாழ்வது, அதிக மனஅமைதியையோ, மகிழ்ச்சியையோ தராது (அன்பின் மகிழ்வு 187)

மேரி தெரேசா: வத்திக்கான் 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கோவிட்-19 பெருந்தொற்று என்ற ஓர் ஆட்கொல்லி நோயே உலகினர் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆயினும், அதைவிட மிகக் கொடிய நோய் ஒன்று உள்ளது. அதுவே, அன்பு பற்றாக்குறை. அன்புகூரவும்,  அன்புகூரப்படவும் இயலாத ஒரு நிலை. அந்நோய், பெருந்தொற்று, புற்றுநோய், காசநோய்  போன்றவற்றைவிட மிகக் கொடியது. இந்த நோய்க்கு மிகச் சிறந்த மருந்து அன்பு, பாசம். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 27, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார். பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் துன்புற்ற ஒரு பெண் குணம்பெற்ற புதுமை பற்றிய நற்செய்திப் பகுதியை விளக்கியபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் ஐந்தாம் பிரிவில், (அன்பு, கனிகள் நிறைந்து திகழ) மற்றவரின் அன்புறவின்றி, குறுகிய வட்டத்திற்குள் தன்னையே சுருக்கிக்கொள்ளும் ஒரு குடும்பம், அதற்குத் தேவையான மகிழ்வையோ அன்பையோ பெற இயலாது என்பதை, “பரந்துவிரிந்த குடும்பத்தில் வாழ்வு (Life in the wider family)” என்ற தலைப்பின் 187ம் பத்தியில் வழங்கியுள்ளார்.

நாம் இருவர், நமக்கிருவர் என்ற அமைப்போடு வாழ்ந்துவரும் குட்டிக் குடும்பத்திற்கு, தாத்தாக்கள், பாட்டிகள், மாமாக்கள், அத்தைகள், பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள், சித்தப்பாக்கள் சின்னம்மாக்கள், அவர்களின் பிள்ளைகள், ஏன் அருகில் வாழ்பவர்கள் போன்ற அனைவரோடும் கலந்துரையாடி உறவோடு வாழவேண்டிய தேவை உள்ளது. இந்த பரந்த குடும்பத்திற்கு, ஒருவர் ஒருவரின் உதவி தேவைப்படுகின்றது. குறைந்தபட்சம் தோழமை, பாசம், அல்லது துன்பங்கள் மத்தியில் ஆறுதல் போன்றவை தேவைப்படுகின்றன. இன்றையக் காலக்கட்டத்தில் மேலோங்கி நிற்கும் தனிமனித கோட்பாடு, சிறு பாதுகாப்புக் கூடுகளை உருவாக்குவதற்கு இட்டுச்செல்கின்றது. அந்த கூடுகளில், மற்றவர்கள், தொந்தரவு கொடுப்பவர்களாக, அல்லது, அச்சுறுத்துபவர்களாக நோக்கப்படுகின்றனர். இருந்தபோதிலும், இவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்வது, மிகுந்த மனஅமைதியையோ, மகிழ்ச்சியையோ தராது. மாறாக, அந்நிலை, குடும்பத்தின் இதயத்தை இன்னலுக்கு உள்ளாக்கும், மற்றும், அதன் வாழ்வை, ஒரு சிறு வட்டத்திற்குள் முடக்கிவிடும் (அன்பின் மகிழ்வு 187).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2021, 15:00