‘ஆபிரகாம் வழிவந்த குடும்ப இல்லம்’ வளாகத்தின் கற்பனை வடிவம் ‘ஆபிரகாம் வழிவந்த குடும்ப இல்லம்’ வளாகத்தின் கற்பனை வடிவம் 

அபு தாபியில், ‘ஆபிரகாம் வழிவந்த குடும்ப இல்லம்’ என்ற வளாகம்

அபு தாபியில், ஒரு கிறிஸ்தவ ஆலயம், யூத தொழுகைக்கூடம் மற்றும் இஸ்லாமியத் தொழுகைக்கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வளாகம், 2022ம் ஆண்டு திறக்கப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில், ‘ஆபிரகாம் வழிவந்த குடும்ப இல்லம்’ என்ற பெயரில், ஒரு கிறிஸ்தவ ஆலயம், யூத தொழுகைக்கூடம் மற்றும் இஸ்லாமியத் தொழுகைக்கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வளாகம், 2022ம் ஆண்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யூதம், கிறிஸ்தவம், மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று மதப் பாரம்பரியங்களும் ஆபிரகாமை தங்கள் தந்தை என்று கருதுவதால், இந்த வளாகம், ‘ஆபிரகாம் வழிவந்த குடும்ப இல்லம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அபு தாபியின் சாதியாத் (Saadiyat) தீவில் உருவாகிவரும் இந்த வளாகம், தற்போது 20 விழுக்காடு முடிவடைந்துள்ளது என்று, உலகளாவிய உடன்பிறந்த நிலை உயர் மட்டக் குழு, ஜூன் 15 இச்செவ்வாயன்று அறிவித்தது.

இந்த மூன்று வழிபாட்டுத் தலங்களில், கிறிஸ்தவ ஆலயம் 'புனித பிரான்சிஸ் ஆலயம்' என்றும், இஸ்லாமிய தொழுகைக்கூடம் 'அல்-தயீப் தொழுகைக்கூடம்' என்றும், யூதர்களின் மெய்யியல் அறிஞரான Moses Ben Maimon என்பவர் பெயரால், யூதத் தொழுகைக்கூடம் அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று வழிபாட்டுக் கூடங்கள் அன்றி, இவ்வளாகத்தில், அனைத்து மதங்களின் கலாச்சாரங்களையும் அறிந்துகொள்வதற்கு உதவியாக கலாச்சார மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆப்ரிக்காவின் டான்சானியாவில் பிறந்து, தற்போது பிரித்தானியாவில் வாழும் David Adjaye Obe என்ற கட்டடக்கலைஞர் உருவாக்கிய வடிவத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிசு வழங்கி, அவர் வடிவமைத்துள்ள திட்டத்தின்படி, ஆபிரகாம் வழிவந்த குடும்ப இல்லம் என்ற வளாகம் உருவாகிவருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2021, 15:06