ஹெயிட்டி நாட்டிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு குடிபெயரும் மக்கள் ஹெயிட்டி நாட்டிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு குடிபெயரும் மக்கள் 

ஹெயிட்டி மக்களுக்கு தற்காலிக பாதுகாப்பு – ஆயர்கள் பாராட்டு

ஹெயிட்டி நாட்டிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு, 18 மாதங்கள், அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அரசுத்தலைவர் பைடனுக்கு ஆயர்கள் பாராட்டு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹெயிட்டி நாட்டிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு, 18 மாதங்கள், அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அரசுத்தலைவர் பைடன் தலைமையில் இயங்கும் அரசுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தங்கள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இயற்கைப் பேரிடர்கள், கோவிட் பெருந்தொற்றின் தாக்கம், ஆள்கடத்தல் உட்பட உள்நாட்டில் நிலவும் வன்முறைகள் ஆகிய காரணங்களால் தங்கள் நாட்டுக்குத் திரும்ப இயலாமல் இருக்கும் மக்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் தற்காலிக பாதுகாப்பு அளிக்கும் இந்த 18 மாத கால அனுமதி, பெரும் நிம்மதியை வழங்கும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

உள்நாட்டில் நிலவும் நிலையற்ற அரசியல், வறுமை, பெருந்தொற்றினால் உருவாகியுள்ள நெருக்கடி, வன்முறைகள், ஆள்கடத்தல் ஆகிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஹெயிட்டி ஆயர்களுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.

தன் பதவிக்காலம் 2020ம் ஆண்டு சனவரி மாதம் முடிவடைந்தாலும், அரசுத்தலைவராக தொடர்ந்து நீடிக்கும் Jovenel Moïse அவர்கள், மக்களின் நலனில் அக்கறைகொண்டு தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று, ஹெயிட்டி ஆயர்கள் விண்ணப்பம் விடுத்துவருகின்றனர்.

மக்கள் நலனையும், மாண்பையும் முன்னிறுத்தி, அரசுத்தலைவர் Moïse அவர்கள், முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென விண்ணப்பித்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், அந்நாட்டின் துன்பங்களைத் துடைக்க, அரசுத்தலைவர் பைடன் அவர்களின் அரசு, அரசியல் வழிகளிலும், மனிதாபிமான வழிகளிலும் உதவிகள் செய்யுமாறு கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2021, 14:32