இந்தியா கோவிட்-19 இந்தியா கோவிட்-19  

கோவிட்-19: தமிழகத் திருஅவையின் மேய்ப்புப்பணிகள்

பெருந்தொற்று காரணமாக, கடன் சுமையிலுள்ள மறைமாவட்டங்கள், துறவு சபைகள் மற்றும், பொதுநிலையினருக்கு, நிதியுதவிகள் செய்யப்படுமாறு அழைப்பு –பேராயர் அந்தோணி பாப்புசாமி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், அந்த நோய் முடிவுற்றபின் வரும் காலத்திலும், விசுவாசிகளுக்கு மேய்ப்புப்பணிகள் ஆற்றுவது குறித்த விரிவான வழிமுறைகளை, தமிழக ஆயர் பேரவையின் தலைவரான, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இயேசுவின் சீடர்கள், பசியாயிருந்த மக்கள் கூட்டத்திற்கு உணவு வழங்குவதை, தீர்க்கப்படவேண்டிய பிரச்சனையாக நோக்கியபோது, இயேசுவோ, அதனை, கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகப் பார்த்ததார் என்று, இந்த வழிமுறைகளைத் துவக்கியுள்ள பேராயர் அந்தோணி அவர்கள், தற்போதைய   பெருந்தொற்று முன்வைத்துள்ள சவால்கள், தலத்திருஅவையும், இறைஇரக்கத்தை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புக்களாக நோக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய தோற்பைகளில், புதிய திராட்சை மது என்பதைப் போல, இப்போதைய சூழலில், திருஅவையில், மேய்ப்புப்பணி தலைமைத்துவம் மற்றும், மறைப்பணி குறித்து, புதியமுறைகளைத் தேடுவதற்கும், அவற்றைக் கண்டுபிடிப்பதற்கும், திறந்தமனம் தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள பேராயர் அந்தோணி அவர்கள், ஒருவர் ஒருவரைப் பராமரிப்பதற்கு, திருஅவை, இறையியல் மற்றும், மறைப்பணிக் கடமையைக் கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார்.

மேய்ப்புப்பணி தலைமைத்துவம்

திருஅவையின் இப்பணிகளை ஒன்பது பிரிவுகளாகப் பிரித்துள்ள பேராயர் அந்தோணி அவர்கள், அவற்றுக்கென்று, ஒரு பங்குத்தளம் அல்லது ஒரு துறவு சபை குறிக்கப்பட்டுள்ளது என்றும், ஊடகங்கள் போன்று பெருந்தொற்று குறித்த அச்சம், மனச்சோர்வு, துன்பம் போன்றவற்றின் விதைகளை விதைக்காமல், மேய்ப்பர்கள், நம்பிக்கை, எதிர்நோக்கு, மற்றும், ஆறுதல் ஆகிய விதைகளை மக்களின் மனங்களில் விதைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலில் மேய்ப்பரே, ஆழமான நம்பிக்கையுள்ள மனிதராகவும், தற்போதைய கடுமையான எதார்த்தத்தை, திறந்த மனத்தோடு, நம்பிக்கையின் கண்களோடு பார்ப்பவராகவும் இருக்கவேண்டும் என்றும், பெருந்தொற்று காலத்தில் பணிகள் ஆற்றுவோர், தன்னிலே ஆழமான நல்மதிப்பீடுகளைக்கொண்டிருந்து, நலவாழ்வு வழிகாட்டுதல்களை பிரமாணிக்கத்தோடு பின்பற்றுபவராக இருக்கவேண்டும் என்றும், பேராயர் அந்தோணி அவர்கள் கூறியுள்ளார்.

மேய்ப்புப்பணி

பெருந்தொற்றுக்குப் பலியானவர்கள், மற்றும், அதிலிருந்து குணம் அடைந்துவந்துள்ள அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும், பொதுநிலையினர் ஆகியோர் குறித்த ஒரு பட்டியலைத் தயாரித்து, இந்நோய்க்குப் பலியாகியுள்ள அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவைப்படும் நிதியுதவி வழியாக ஆதரவு வழங்குமாறு, ஆயர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், பேராயர் அந்தோணி பாப்புசாமி.

பெருந்தொற்று காரணமாக, கடன்சுமையிலுள்ள மறைமாவட்டங்கள், துறவு சபைகள் மற்றும், பொதுநிலையினருக்கு, உடனடியாக, நிதியுதவிகளை வழங்குமாறும், பெற்றோர், பிள்ளைகள், கணவன், மற்றும், மனைவி ஆகியோரை இழந்துள்ள குடும்பங்களைப் பட்டியலிட்டு, அவர்களின் இல்லங்களுக்கு உணவு உதவிகளை வழங்குமாறு, அன்பியங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், மதுரை பேராயர் அந்தோணி.

இறைவேண்டல்கள்

மேலும் பல்வேறு மேய்ப்புப்பணிகளைக் குறிப்பிட்டுள்ள பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று, விரைவில் ஒழியவும், புதியதொரு நாள், உலக சமுதாயத்திற்குப் விடியலைக் கொணரவும் வேண்டும் என்று செபிப்போம் எனக் கூறியுள்ளார்.

தங்கள் வாழ்வை, பணயம்வைத்துப் பணியாற்றும், மருத்துவப் பணியாளர்களுக்காக செபிக்கும்படி விண்ணப்பித்துள்ள பேராயரின் அறிக்கை, அரசுகளின் தலைவர்கள், மக்களின் நல்வாழ்வுக்காகத் தீர்மானங்கள் எடுக்கவும், நாம் ஒருவர் ஒருவருக்கு, தொடர்ந்து நற்பணிகள் ஆற்றவும் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. (Ind.Sec/Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2021, 15:35