தேடுதல்

கோவிட் பெருந்தொற்று சூழலில், அன்னையின் அன்புக்கரம் பற்றி நடக்கும் இந்தியக் குழந்தை கோவிட் பெருந்தொற்று சூழலில், அன்னையின் அன்புக்கரம் பற்றி நடக்கும் இந்தியக் குழந்தை 

உயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

அன்னையின் அன்பைக் கொண்டாடும் அன்னை தினத்தன்று, ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பே, இயேசுவின் சீடர்களுக்கு, அடையாளமாக அமையவேண்டும் என்ற முக்கியப் பாடத்தை, இன்றைய வாசகங்கள் கூறுகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

ஏப்ரல் மாதத் துவக்கத்திலிருந்து, இந்தியாவைக் குறித்து வெளியாகும் செய்திகள், நம்மை வேதனையில் ஆழ்த்திவருகின்றன. பொதுவாகவே, ஊடகங்கள் வெளியிடும் பெரும்பாலான செய்திகள், நம் உள்ளங்களில், நம்பிக்கை நரம்புகளை அறுத்துவிடுகின்றன. இருப்பினும், அவ்வப்போது, அவற்றில் வெளியாகும் ஒரு சில செய்திகள், நமக்குள் நம்பிக்கை தீபங்களையும் ஏற்றிவைக்கின்றன. அத்தகையச் செய்திகளில் ஒன்று, இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்கிவைக்கிறது.

1987ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டிட்ராய்ட் (Detroit) நகர் விமான நிலையத்திற்கருகிலேயே நடைபெற்ற ஒரு விபத்தில், விமானத்தில் இருந்த 155 பேரில், 154 பேர் கொல்லப்பட்டனர். Cecelia Cichan என்ற 4 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்தார். முற்றிலும் எரிந்துபோயிருந்த அந்த விமானத்தில், அச்சிறுமி மட்டும் உயிர் பிழைத்தது, ஓர் அதிசயம் என்று கருதப்படுகிறது. விமானம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிந்த செசிலியாவின் அன்னை, Paula Cichan அவர்கள், தன் இருக்கையைவிட்டு எழுந்து, செசிலியாவின் இருக்கைக்குமுன் முழந்தாள்படியிட்டு, தன் மகளை இறுக அணைத்துக்கொண்டார் என்றும், அவரது அணைப்பினால், சிறுமி செசிலியா உயிர் பிழைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விபத்தில், செசிலியாவின் அம்மா, அப்பா, மற்றும், 6 வயதான அண்ணன், ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

தன் உயிரை வழங்கி, மகளின் உயிரைக் காத்த Paula என்ற அந்த அன்னையைப் பற்றிய செய்தியை இன்று நினைவுகூர இரு காரணங்கள் உண்டு.

  • முதல் காரணம், இன்று நாம் சிறப்பிக்கும் அன்னை தினம்.

இரண்டாவது காரணம், இந்த ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள், 'அன்பு' என்ற உன்னத உண்மையைப் பற்றி, நம் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிக்கும் எண்ணங்கள்.

முதலில், மே 9, இஞ்ஞாயிறன்று, நாம் சிறப்பிக்கும் அன்னை தினம், நம் சிந்தனைகளின், செபங்களின் மையமாகட்டும். உலகில்,  80க்கும் மேற்பட்ட நாடுகளில், ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் இரண்டாம் ஞாயிறு, அன்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை ‘அன்னையின் தினம்’ (Mother’s Day) என்று ஒருமையில் அழைப்பதா? ‘அன்னையரின் தினம்’ (Mothers’ Day) என்று பன்மையில் அழைப்பதா? என்ற குழப்பம் அவ்வப்போது எழுகிறது. இந்த நாளை, அதிகாரப்பூர்வமான ஒரு விழாவாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு அறிவிக்கவேண்டுமென்று பலவழிகளிலும் பாடுபட்ட, அன்னா ஜார்விஸ் (Anna Jarvis) என்ற பெண்மணி, இக்கேள்விக்குச் சரியான விடையளித்துள்ளார்:

"இது அன்னையின் தினம்தான். அன்னையரின் தினம் அல்ல. நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும் தனிப்பட்ட, சிறப்பான இடம் கொடுத்து, அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கையே, இந்த நாள். ‘அன்னையர்’ என்ற பன்மை வடிவம் கொடுத்து, முகமற்ற ஒரு கருத்தைக் கொண்டாடும் நாள் இதுவல்ல" என்று, அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

தான் பாடுபட்டு உருவாக்கிய இந்த உன்னத நாள், சில ஆண்டுகளிலேயே வியாபார மயமாகிவிட்டதைக் கண்டு, அன்னா ஜார்விஸ் அவர்கள், மிகவும் மனம் நொந்தார். வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துகள், இனிப்புகள், பரிசுகள் என்று, அன்னை தினம், வியாபாரத் திருநாளாக விற்கப்படுவதை நாம் மறுக்கமுடியாது. அதிலும் குறிப்பாக, நம்மைப் பெற்று, வளர்த்த அன்னையை, நேரில் சென்று பார்க்கக்கூட, மனமோ, நேரமோ இன்றி, செல்லிடப்பேசி, தபால் வழியே அவர்களுக்கு, வாழ்த்துக்களையும், மலர்களையும், பரிசுகளையும் அனுப்புவது, அன்னை தினத்தின் மிகப்பெரும் கொடுமை! இந்த வியாபாரப்பிடியிலிருந்து அன்னை தினத்தை விடுதலை செய்து, நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும், உரிய மதிப்பையும், அன்பையும் முகமுகமாக வழங்கவேண்டியது நம் கடமை!

பெற்றோருக்கு, நாம், நேரடியாக, முகமுகமாக ஆற்றவேண்டிய கடமைகளை, எவ்வளவு தூரம் தவறவிட்டுள்ளோம் என்பதை, கோவிட்-19 கிருமி, மிகவும் வேதனையான வழியில், நமக்கு உணர்த்திவருகிறது. குறிப்பாக, தங்கள் சொந்த இல்லங்களிலோ, முதியோர் காப்பகங்களிலோ தனித்து விடப்பட்டுள்ள பெற்றோர், சென்ற ஆண்டும், இவ்வாண்டும், கோவிட் பெருந்தொற்று விதித்துள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, தனிமையில், தங்கள் முடிவைச் சந்தித்துள்ளனர். அவர்களை, இந்த அன்னை தினத்தில் குறிப்பாக எண்ணிப்பார்ப்போம்.

'அன்னை தினம்' என்று ஒரு நாளை, கத்தோலிக்கத் திருஅவை, தன் வழிபாட்டு நாள்காட்டியில் குறிக்கவில்லை என்பது உண்மை. ஆனால், ஆண்டின் பல நாட்களில், அன்னை மரியாவுக்கு சிறப்பான விழாக்களைக் குறிப்பிட்டுள்ளது, திருஅவை. இவ்வாண்டு, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், மரியன்னையின் பெயரால் உலகெங்கும் உருவாக்கப்பட்டுள்ள திருத்தலங்கள் ஒன்றிணைந்து, கோவிட் பெருந்தொற்றினால் விளைந்துள்ள துன்பங்கள் நீங்க, ஒவ்வொரு நாளும் செபமாலையைச் செபிக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகெங்கும் நிகழும் இந்த செபமாலை தொடர் முயற்சியில் (Rosary marathon), ஒவ்வொரு நாளும், அன்னை மரியாவின் பெயரால் நிறுவப்பட்டுள்ள ஒரு திருத்தலம், மையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின்படி, மே 13, வருகிற வியாழன், பாத்திமா அன்னை மரியாவின் திருநாளன்று, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை திருத்தலத்திலும், மே, 14, வெள்ளியன்று, தமிழகத்தின் வேளாங்கண்ணித் திருத்தலத்திலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும். மே மாதம் முழுவதும் நடைபெறும் இந்த பக்திமுயற்சியில் நாமும் இணைந்து, உலகை வதைக்கும் பெருந்தொற்று நீங்கவேண்டும் என்று செபிப்போம்.

தன்னிகரற்ற அன்னையின் அன்பைக் கொண்டாடும் அன்னை தினத்தன்று, இன்றைய வாசகங்களை மையப்படுத்தி சிந்திப்போம். ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பே, இயேசுவின் சீடர்களுக்கு, அடையாளமாக அமையவேண்டும் என்ற முக்கியப் பாடத்தை, இன்றைய இரண்டாம் வாசகமும், நற்செய்தியும் வலியுறுத்திக் கூறுகின்றன. யோவான் எழுதிய முதல் திருமுகத்தின் 4ம் பிரிவிலிருந்து வழங்கப்பட்டுள்ள இன்றைய இரண்டாம் வாசகத்தில், "கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவான் 4:8) என்ற சொற்கள் வழியே, கடவுளைப்பற்றிய ஆழ்ந்ததோர் உண்மை கூறப்பட்டுள்ளது. "God is Love" அதாவது, "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற இம்மூன்று சொற்கள், கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக, இதயத்துடிப்பாக அமைந்துள்ளன. இந்த உண்மை ஒன்றே, அனைத்து உண்மையான மதங்களின் உயிர்த்துடிப்பு என்று, உறுதியாகச் சொல்லலாம்.

இந்த இலக்கணத்தை பொன்னெழுத்துக்களால் செதுக்கி, அவற்றில் வைரக்கற்களைப் பதித்து, ஓரு சிலையாக உருவாக்கி, அதற்கு ஒரு கோவில் எழுப்பி, நாம் வழிபட முடியும். அவ்வாறு செய்தால், "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற இலக்கணத்தின் உண்மைப் பொருளை நாம் கொன்றுவிடுவோம். "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்று கூறும் யோவான், அந்த அன்பு, வானத்தில் இருந்தபடியே, நம் வழிபாட்டை எதிர்பார்க்கவில்லை, மாறாக, அந்த அன்பை செயல்வடிவில் வெளிப்படுத்த, தன் மகனை இவ்வுலகிற்கு இறைவன் அனுப்பினார் என்று தெளிவுபடுத்துகிறார். இத்தகைய அன்பை உணர்ந்தவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை, யோவானின் திருமுகம் இவ்வாறு கூறியுள்ளது: அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். (1 யோவான் 4:11)

"கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் கடவுள் மீது அன்புகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று யோவான் கூறியிருந்தால், அது, பொருளுள்ள கூற்றாகத் தெரிந்திருக்கும். ஆனால், யோவான் கூறியுள்ள சொற்கள் புதிராக உள்ளன. கடவுள் நம்மீது கொள்ளும் அன்புக்கு, நாம் அளிக்கக்கூடிய பதிலிறுப்பு, நாம் மற்றவர்கள் மீது கொள்ளும் அன்பு என்று யோவான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தக் கண்ணோட்டத்தில் அவர் சிந்திப்பதற்கு, இயேசு, இதே எண்ணங்களை இறுதி இரவுணவின்போது சீடர்களுக்குக் கூறியிருந்தது, ஒரு காரணமாக அமைந்தது. அந்தப் பகுதி, இன்று, நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.

அந்த இறுதி இரவுணவின்போது, இயேசு, தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியபின்னர், புதிய கட்டளையொன்றை அவர்களுக்கு வழங்கினார்: "‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார். (யோவான் 13:34-35)

இயேசு வழங்கிய இந்தப் புதியக் கட்டளை, நாம் வழக்கமாகச் சிந்திக்கும் பாணியிலிருந்து வேறுபடுவதை உணர்கிறோம். "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் என்னிடம் அன்பு செலுத்துங்கள்" என்று இயேசு கூறியிருந்தால், அதை நாம் எளிதில் புரிந்துகொள்வோம். ஆனால், "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்ற, புதிய கட்டளையின் வழியே, கிறிஸ்தவ அன்பின் நோக்கம் என்ன என்பதை இயேசு தெளிவாக்குகிறார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு கூறும் சொற்களைக் கேட்கும்போது, அவை, புரட்சிகரமான அன்பைப் பற்றி கூறுகின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம். "என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல, நானும் என் தந்தை மீது அன்புகொண்டுள்ளேன்" என்றும், "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் என் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும்" என்றும் இயேசு சொல்லியிருந்தால், அவற்றை யாரும் எளிதில் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால், இங்கு இயேசு, “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்” (யோ. 15:9) என்று கூறியபின், "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோ. 15:12) என்று கூறுகிறார்.

நாம் ஒருவர் மீது அன்பு கொண்டால், அவர் பதிலுக்கு, நம்மீது அன்பு கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை. ஆனால், இயேசு, தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்த அன்பு, பிரதிபலனை எதிர்பார்த்து காட்டப்படும் அன்பு அல்ல என்பது, தெளிவாகப் புரிகிறது. இந்த அன்பு, 'உனக்கு நான், எனக்கு நீ' அல்லது, ‘நமக்கு நாம்’ என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியேறி, அடுத்தவர், அதற்கடுத்தவர் என்று, மேலும், மேலும் பரந்து, விரிந்து செல்லவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

இவ்வாறு, பரந்து, விரிந்து செல்லும் அன்பைப்பற்றி கூறிய இயேசு, அடுத்த வரியில், அன்பின் ஆழத்தையும் தெளிவுபடுத்துகிறார்: "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோ. 15:13). உச்சக்கட்ட சவாலாக ஒலிக்கும் இச்சொற்கள், கோடான கோடி மனிதர்கள், அன்பின் சிகரங்களை அடைவதற்கு ஓர் உந்துசக்தியாக அமைந்துவருகின்றன.

2012ம் ஆண்டு, சீனாவில் நடந்த ஒரு நிகழ்வு இது. Deng Jinjie என்ற 27 வயது இளைஞர், ஓர் ஆற்றங்கரை ஓரமாக தன் இரு நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆற்றில், இளவயது தம்பதியரும், அவர்களின் ஐந்து வயது குழந்தையும் நீந்திக் கொண்டிருந்தனர். அக்குழந்தைக்குப் பாதுகாப்பாக, இடுப்பு வளையம் போடப்பட்டிருந்தது. திடீரென, அக்குழந்தை ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பெற்றோர் அலறவே, இளைஞர் Deng Jinjie அவர்கள், தனக்கு என்ன ஆகும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல், அக்குழந்தையைக் காக்க ஆற்றில் குதித்தார். அந்நேரத்தில், அப்பெற்றோரும் ஆற்றின் ஆழத்திற்கு இறங்கவே, இளையவர் Deng Jinjie அந்த மூவரையும் காக்க வேண்டியதாயிற்று. ஆற்று நீரின் வேகம் கூடிக்கொண்டே இருந்ததால், அவர் அதிக போராட்டத்திற்குப் பின், மூவரையும் கரைக்கு அருகே கொண்டுவந்து சேர்த்தார். அந்த போராட்டத்தில் அவர் தன் சக்தியை முற்றிலும் இழந்ததால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பின், அவரது உயிரற்ற உடல் கரைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவில், கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை என்ற சுனாமியில் சிக்கித் தவிக்கும் ஆயிரமாயிரம் நோயாளிகளை, தாயன்போடு, காப்பாற்றிவரும் மருத்துவப்பணியாளர்கள், உணவு, மருந்து என்ற அவசர உதவிகளை வழங்க முன்வரும் தன்னார்வத் தொண்டர்கள், இறந்தோருக்கு இறுதிச் சடங்குகளை ஆற்ற முன்வருவோர் அனைவரும், இயேசு கூறியுள்ள உண்மையான அன்பிற்கு உன்னத எடுத்துக்காட்டுகள். இவர்கள் அனைவரையும், இறைவனின் சந்நிதியில் நன்றியுடன் நினைத்து, இவர்கள் மீது இறைவனின் ஆசீர் நிறைவாய் வந்திறங்க மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2021, 13:53