பெலாருஸ் நாட்டில் Budslau ஆலயத்தில் வணங்கப்படும் அன்னை மரியாவின் திருஉருவப்படம் பெலாருஸ் நாட்டில் Budslau ஆலயத்தில் வணங்கப்படும் அன்னை மரியாவின் திருஉருவப்படம் 

தீ விபத்தில் காப்பாற்றப்பட்ட அன்னையின் திருஉருவப்படம்

Budslau ஆலயத்தில் வணங்கப்படும் அன்னை மரியாவின் திருஉருவப்படம், உரோம் நகரில் உருவாக்கப்பட்டு, 1598ம் ஆண்டு, திருத்தந்தை 8ம் கிளமென்ட் அவர்களால், பெலாருஸ் மக்களுக்கு பரிசாக அனுப்பப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற விண்ணேற்பு அன்னை மரியாவின் ஆலயம், மே 11, இச்செவ்வாயன்று தீ விபத்திற்கு உள்ளாகி, ஆலயத்தின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்ததென்று கத்தோலிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.

பெலாருஸ் நாட்டின் தலைநகர் Minsk நகருக்கு 140 கி.மீ. தூரத்தில் Budslau என்ற ஊரில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை மரியாவின் ஆலயத்தில் காலை 8 மணியளவில் தீ பரவ துவங்கியதும், பங்கு அருள்பணியாளரும், பங்கு மக்களும் இணைந்து, கோவிலில் வைக்கப்பட்டிருந்த திருநற்கருணை, பீடத்தில் வைக்கப்பட்டிருந்த மிகப் புகழ்பெற்ற அன்னை மரியாவின் திருஉருவப்படம், மற்றும், ஏனைய திரு உருவச் சிலைகளைக் காத்தனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

மரியா, இறைவனின் தாய் என்ற பெயருடன், இவ்வாலயத்தில் வணங்கப்படும் அன்னை மரியாவின் திருஉருவப்படம், உரோம் நகரில் உருவாக்கப்பட்டு, 1598ம் ஆண்டு, திருத்தந்தை 8ம் கிளமென்ட் அவர்களால், பெலாருஸ் மக்களுக்கு பரிசாக அனுப்பப்பட்டது.

பெலாருஸ் நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் அன்னை மரியாவின் திருஉருவப்படத்தைக் காண, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் நடைபயணமாக இத்திருத்தலத்திற்கு வருகை தருகின்றனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

அன்னை மரியாவின் திருஉருவப்படத்தைக் கொண்டுள்ள இத்திருத்தலத்தை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1994ம் ஆண்டு, மைனர் பசிலிக்கா என்ற நிலைக்கு உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA/AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2021, 15:11