தேடுதல்

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை விடுவிக்க கோரிக்கை இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை விடுவிக்க கோரிக்கை 

அருள்பணி ஸ்டான் சுவாமியின் உடல்நலத்திற்காகச் செபம்

மும்பை தலோஜா சிறையில் வாடுகின்ற கைதிகளின் மிக மோசமான நிலைமை, அதிகாரிகள், மற்றும், நீதிமன்றத்தின் மனச்சான்றைத் தட்டியெழுப்பவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்திய தேசியப் புலனாய்வுத்துறை (என்ஐஏ) உருவாக்கிய சட்டத்தின்கீழ், பொய் வழக்குப் புனையப்பட்டு, மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 84 வயது நிரம்பிய, மனித உரிமை போராளி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், உடல்நிலை குன்றியிருப்பதால், அவருக்காக இறைவனை மன்றாடுமாறு இயேசு சபையினர் விண்ணப்பித்துள்ளனர்.

200 நாள்களுக்கு மேலாக, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், அருள்பணி  ஸ்டான் சுவாமி அவர்கள், மே 14, இவ்வெள்ளியன்று, பெங்களூர், இயேசு சபையினரின் இந்திய சமூகநல நிறுவனத்தினரின் தலைவரான, இயேசு சபை வழக்கறிஞர் ஜோ சேவியர் அவர்களைத் தொலைப்பேசியில் அழைத்து, தனக்கு காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகள் உள்ளன என்றும், மொத்தத்தில், சிறையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கூறியுள்ளார். 

தன்னைப்போல் குற்றம் சுமத்தப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பேராசிரியரான முனைவர் Hany Babu என்பவருக்கு, சில நாள்களுக்குமுன், கடுமையான கண் பிரச்சனை இருந்தது என்றும், அவரை கோவிட்-19 பெருந்தொற்று பாதித்து, மும்பை நகரின் மருத்துவமனை ஒன்றிற்கு எடுத்துச்செல்லப்பட்டார் என்றும், சிறையில் Hany Babu அவர்கள் தங்கியிருந்த பகுதியில் தானும் இருந்த்தாகவும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் கூறியிருக்கிறார்.

தலோஜா சிறையில் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், இதுவரை, கைதிகளுக்கு பெருந்தொற்று பாதிப்பு குறித்த பரிசோதனையோ, அல்லது, தடுப்பூசிகளோ வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பேராசிரியர் Hany Babu அவர்களுக்கு, பெருந்தொற்று என்ற தகவலுக்குப்பின், பீமா கொரேகான் வழக்குத் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் மிகவும் கவலையாய் உள்ளன என்றும், இந்நிலையை ஊடகங்கள், மற்றும், பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல அக்குடும்பங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

மும்பை தலோஜா சிறையில் வாடுகின்ற கைதிகளின் மிக மோசமான நிலைமை, அதிகாரிகள், மற்றும், நீதிமன்றத்தின் மனச்சான்றைத் தட்டியெழுப்பவேண்டும் என்ற நம்பிக்கையோடு செபிப்போம் என, இயேசு சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் நலவாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வந்த, தமிழகத்தைச் சேர்ந்த 84 வயதான மனித உரிமை ஆர்வலர் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, தேசியப் புலனாய்வு (NIA) அமைப்பு,  பொய்வழக்குத் தொடுத்து, அவரைக் கைது செய்துள்ளது. (Ind.Sec/Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2021, 15:48