தேடுதல்

Vatican News
மேரி மேஜர் பெருங்கோவில் பீடம் மேரி மேஜர் பெருங்கோவில் பீடம்  (©Pavel Losevsky - stock.adobe.com)

திருத்தந்தையர் வரலாறு - ஆன்மீக அரசியல் இணக்கநிலை

புனித பேதுரு பெருங்கோவிலில் பல திருப்பலி மேடைகளை நிறுவி, அங்கு மறைசாட்சிகளின் எலும்புகளை வைத்து பாதுகாத்த, திருத்தந்தை முதலாம் பாஸ்கல்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்புள்ளங்களே, பல்வேறு எதிர்ப்புக்களையும், துன்பங்களையும் தாண்டி, நேர்மையான முறையில் வழிநடத்தி பல சீர்திருத்தங்களையும் கொணர்ந்த திருத்தந்தை புனித முன்றாம் லியோ குறித்து கடந்த வாரம் கண்டோம்.

816ம் ஆண்டு ஜுன்மாதம் திருத்தந்தை முன்றாம் லியோ அவர்கள் இறந்தபோது, ஏற்கனவே இரண்டு திருத்தந்தையர்களை வழங்கியுள்ள அதே பிரபுக்கள் குடும்பத்திலிருந்து, திருத்தந்தை 4ம் ஸ்தேவான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்திருத்தந்தை சில வரலாற்று ஆசிரியர்களால் 5ம் ஸ்தேவான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்திருத்தந்தை தம் இளவயதில் திருத்தந்தையர்கள் முதலாம் ஏட்ரியன், மற்றும் முன்றாம் லியோவால் பெரிதும் ஆதரிக்கப்பட்டவர். இவர் 816ம் ஆண்டு திருத்தந்தையானபோது, அனைத்து உரோமை மக்களும், பேரரசர் லூயி அவர்களுக்கு, தங்கள் கீழ்படிதலை வெளிப்படுத்த, ஒரு வாக்குறதி எடுக்கவேண்டும் என கட்டளையிட்டார். இவர், பிரான்ஸ் நாட்டுக்கு நேரடியாகவே சென்று, பேரரசர் லூயி அவர்களுக்கு முடிசூட்டினார். ஏற்கனவே, பிராங்க் இன மக்களுக்கும், திருப்பீடத்திற்கும் இடையேயிருந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவும் செய்தார், திருத்தந்தை 4ம் ஸ்தேவான். பிரான்சிலிருந்து உரோமுக்கு திரும்பும் வழியில், உரோமைய மன்னரின் இடமான ரவென்னா சென்று, அங்கு இயேசுவின் பாதணிகளை மக்களின் வணக்கத்திற்கென திறந்துவைத்தார். கடந்த திருத்தந்தை முன்றாம் லியோ அவர்களின் காலத்தில் உரோமிலிருந்து கடத்தப்பட்ட திருப்பீட எதரிகளை, ரவென்னாலிருந்து உரோமைக்கு கொணர்ந்தவரும் திருத்தந்தை 4ம் ஸ்தேவான் அவர்களே. இவர் ஓராண்டு கூட திருஅவை தலைமைப்பதவியை கொண்டிருக்கவில்லை. அதாவது, பதவியேற்ற 7 மாதங்கள் நிறைவுற்றநிலையில் 817ம் ஆண்டு ஜனவரி 24ந்தேதி காலமானார், திருத்தந்தை 4ம் ஸ்தேவான்.

இவருக்கு அடுத்ததாக, 817ம் ஆண்டு சனவரி மாத இறுதியில் பதவியேற்றவர், திருத்தந்தை முதலாம் பாஸ்கல். தன் இளம் வயதிலேயே உரோமைய குருவாக விரும்பி, இலாத்தரன் பாப்பிறை இல்லத்தில், திருவழிபாடு, மற்றும் விவிலியம் குறித்து இவர் பயின்றார். வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அருகில் இருக்கும் புனித ஸ்தேவான் துறவு மடத்தின் அதிபராக இவரை நியமித்திருந்தார், திருத்தந்தை முன்றாம் லியோ. அதேவேளை, உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகளின் தேவைகளை கவனிப்பதும் அப்போதைய துறவுமட அதிபரான முதலாம் பாஸ்கலின் பணியாக இருந்தது. இத்தகைய ஒரு சூழலில், திருத்தந்தை 4ம் ஸ்தேவான் அவர்கள் மரணமடைய, ஒருமித்த கருத்தாக திருத்தந்தை முதலாம் பாஸ்கல் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு, பேரரசர் லூயி அவர்கள், “Pactum Ludovicianum”  என்ற அறிக்கையை, திருத்தந்தைக்கு அனுப்பினார். அது திருப்பீடத்தின் உரிமைகளையும், சொத்துக்களையும் குறித்து அங்கீகரிக்கும், முழு விளக்க அறிக்கையாக இருந்தது. பிராங்ஸ் பேரரசர்களோடு இவர் நல்லுறவு கொண்டிருந்தார். லூயி  பேரரசரின் மகன்  முதலாம் Lothair அவர்களின் திருமணத்திற்கு உயரிய பரிசுப் பொருட்களையும் அனுப்பினார். மேலும், 823ம் ஆண்டு மன்னர் முதலாம் Lothair அவர்கள், உரோம் நகர் வந்தபோது, அவரை, பேரரசராக முடிசூட்டவும் சேய்தார், திருத்தந்தை முதலாம் பாஸ்கல். அதேவேளை, உரோம்நகரின் மீது பேரரசர்கள் அதிகாரம் செலுத்துவதை இவர் வரவேற்கவில்லை, என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரான்சிலிருந்து மறைபோதகப் பணிக்கென அருள்பணியாளர்கள் சென்றதற்கு, திருத்தந்தை முதலாம் பாஸ்கல் அவர்கள் ஊக்கமளித்தார். இவர் காலத்தில் உருவ வழிபாடு குறித்த பிரச்சனை மீண்டும் தொடர்ந்தது. பைசன்டைன் பேரரசர் லியோ இதில் தலையிட்டு, திருப்பீடத்தின்  அணுகுமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டார். இதனால், பல துறவு மடங்களின் உறுப்பினர்கள், கான்ஸ்டான்டிநோபில் பகுதிகளிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும்  உரோம்  நகருக்கு அடைக்கலம் தேடி வரவேண்டியதாயிருந்தது. அவர்கள் அனைவரையும் வரவேற்று ஆதரித்த திருத்தந்தை முதலாம் பாஸ்கல் அவர்கள், பல துறவு மடங்களில் அவர்களை அமர்த்தினார். பல கோவில்களையும் இவர் சீரமைத்தார். புனித பேதுரு பெருங்கோவிலில் பல திருப்பலி மேடைகளை நிறுவி, அங்கு மறைசாட்சிகளின் எலும்புகளை வைத்து பாதுகாத்தார். புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் பாடகர் குழுவை ஊக்கமளித்து மேம்படுத்தினார் திருத்தந்தை முதலாம் பாஸ்கல்.

ஏழாண்டுகள் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை முதலாம் பாஸ்கல் அவர்களுக்குப்பின் 824ம் ஆண்டு திருத்தந்தையாக தேர்வுசெய்யப்பட்டார் திருத்தந்தை இரண்டாம் யூஜின். 3 ஆண்டுகள் வழிநடத்திய இத்திருத்தந்தையின் காலம் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

05 May 2021, 16:38