உலக அமைதிக்காக செபமாலை உலக அமைதிக்காக செபமாலை  

மியான்மார்-மே மாதத்தில், அமைதி, நீதிக்காக சிறப்பு செபம்

மியான்மாரில், 2016ம் ஆண்டு ஏப்ரலில், சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி அவர்களின் அரசு ஆட்சிக்குவருமுன், அந்நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, இராணுவ ஆட்சியே நடைபெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மாரில், அமைதி, நீதி, ஒற்றுமை, மற்றும், மனித மாண்பை மதித்தல் ஆகியவை நிலவவேண்டும் என்று, இந்த மே மாதத்தில் செபமாலை செபிக்கவும், திருநற்கருணை ஆராதனையில் பங்குகொள்ளவும், அந்நாட்டு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ.

மே 01, இச்சனிக்கிழமையன்று துவங்கியுள்ள மே மாதத்திற்கென, மடல் ஒன்றை வெளியிட்டுள்ள, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், மே மாதம் முழுவதும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு கருத்துக்காக இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல் வாரத்தில் அமைதி, இரண்டாவது வாரத்தில் நீதி, மூன்றாவது வாரத்தில் ஒற்றுமை, நான்காவது வாரத்தில் மனித மாண்பு மதிக்கப்படல் என்று, மியான்மார் கத்தோலிக்கர் செபிக்குமாறு, கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.

விசுவாசிகள், தங்களின் வசதிக்கேற்ப, இல்லங்களில், பங்குத்தளங்களில், அல்லது, துறவுக் குழுமங்களில், இறைவேண்டல், மற்றும், திருநற்கருணை ஆராதனை வழிபாடுகளில் பங்கெடுக்கலாம் என்றும், கர்தினாலின் செய்தி கூறுகிறது.

நீதி, உண்மை, ஒருமைப்பாடு ஆகியவை இன்றி, உண்மையான அமைதி கிட்டாது என்ற, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ள மியான்மார் கர்தினால், இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியிலிருந்து இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மாருக்காக உருக்கமாகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

மியான்மாரில், 2016ம் ஆண்டு ஏப்ரலில், சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி அவர்களின் கட்சி ஆட்சிக்கு வருமுன், அந்நாட்டில், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, இராணுவ ஆட்சியே நடைபெற்றது.

மியான்மாரில் இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியிலிருந்து, குறைந்தது 759 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், ஏறத்தாழ 3,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2021, 15:22