பிலிப்பீன்சில் சுரங்கத்தொழில்கள் பிலிப்பீன்சில் சுரங்கத்தொழில்கள் 

சுரங்கத்தொழில் நிறுவனங்களுக்கு தடைவிதிக்க...

சுரங்கத் தொழில்கள் புதிதாகத் தொடங்கப்படுவதற்கு பிலிப்பீன்ஸ் அரசு அனுமதியளிக்கத் தீர்மானித்திருப்பது, ஏழைகளின் வாழ்வை மிகவும் பாதிக்கும் - ஆயர் Pabillo

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவை Laudato Si’ வாரத்தைக் கடைப்பிடித்துவரும் இவ்வேளையில், பிலிப்பீன்ஸ் அரசு, புதிய சுரங்கத்தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு ஆயர் ஒருவர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si’ திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள உலகளாவிய கத்தோலிக்க அமைப்பும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனமும் இணைந்து, மே 16 இஞ்ஞாயிறு முதல், Laudato si’ வாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.

இந்த வாரத்தை முன்னிட்டு யூக்கா செய்தியிடம் பேசிய, மனிலா உயர்மறைமாவட்டத்தின் நிர்வாகியாகப் பணியாற்றும், ஆயர் Broderick Pabillo அவர்கள், சுரங்கத் தொழில்கள் புதிதாகத் தொடங்கப்படுவதற்கு பிலிப்பீன்ஸ் அரசு அனுமதியளிக்கத் தீர்மானித்திருப்பது, ஏழைகளின் வாழ்வை மிகவும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

பிலிப்பீன்சில் புதிய சுரங்கத்தொழில்கள் தொடங்குவது, கடந்த ஒன்பது ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்தது. அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள், அத்தடையை நீக்கி இவ்வாண்டு ஏப்ரல் 14ம் தேதி கையெழுத்திட்டுள்ளார். இதன் வழியாக, 400 கோடி டாலர் மதிப்புடைய முதலீடுக்கு கையெழுத்திடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

அரசின் இத்தீர்மானம், சுற்றுச்சூழல் மேலும் சீர்கேடு அடைவதை துரிதப்படுத்தும் என்றும், மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பளிக்கும் என்றும், ஆயர் Pabillo அவர்கள், கவலை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2021, 15:28