எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa 

புனித பூமியில் அமைதி, ஒத்துழைப்பிற்கு அழைப்பு

தற்போது இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கு இடையே இடம்பெற்றுள்ள இடைக்காலப் போர் நிறுத்தம், அந்த வன்முறை ஆரம்பிக்க காரணமாக இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவில்லை - முதுபெரும்தந்தை Pizzaballa

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித பூமியில் மதக் குழுக்கள் மத்தியில், அமைதி, புரிந்துணர்வு, மற்றும், ஒத்துழைப்பு ஆகிய பண்புகள் தேவைப்படுகின்றன என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa அவர்கள் கூறினார்.

மே 22, கடந்த சனிக்கிழமை மாலையில், எருசலேம் புனித ஸ்தேவான் ஆலயத்தில், புனித பூமியின் அமைதிக்காக நடைபெற்ற, பெந்தக்கோஸ்து திருவிழிப்பு வழிபாட்டில் உரையாற்றிய, முதுபெரும்தந்தை Pizzaballa அவர்கள், எருசலேம் நகரின் தனிப்பண்பைச் சுட்டிக்காட்டியதோடு, புனிதபூமியில் அமைதியைக் காக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக் கூறினார்.

இந்த ஆலயத்தில், தூய ஆவியாரின் கொடைகளுக்காக மன்றாடுவதற்காக மட்டும் அல்ல, அதோடு, அமைதி, நீதி, மற்றும், வன்முறை முடிவுக்கு வரவேண்டும் என, இறைவேண்டல் செய்வதற்காகவும் கூடியிருக்கிறோம் என்று, முதுபெரும்தந்தை Pizzaballa அவர்கள் கூறினார்.

தற்போது இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கு இடையே இடம்பெற்றுள்ள இடைக்காலப் போர் நிறுத்தம், நம் குடும்பங்களுக்கு ஓரளவு அமைதியைக் கொண்டு வந்திருக்கலாம், ஆனால், அந்த போர் நிறுத்தம், அந்த வன்முறை ஆரம்பிக்க காரணமாக இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவில்லை என்றும், முதுபெரும்தந்தை Pizzaballa அவர்கள் கூறினார்.

மே 22, கடந்த சனிக்கிழமை மாலையில், எருசலேம் புனித ஸ்தேவான் ஆலயத்தில், புனித பூமியின் அமைதிக்காக நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில், உலகின் கத்தோலிக்கர் அனைவரும் ஆன்மீக முறையில் பங்குகொண்டு செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2021, 15:26