அருளாளர் தேவசகாயம் அருளாளர் தேவசகாயம்  

அருளாளர் தேவசகாயம் அவர்களை புனிதராக அறிவிப்பது குறித்த....

அருளாளர் தேவசகாயம் அவர்கள், 1752ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் தேதி, ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில், மறைசாட்சியாகச் சுட்டுக்கொல்லப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான்

மறைசாட்சியான அருளாளர் தேவசகாயம் அவர்களை, புனிதராக உயர்த்துவது, அதற்குரிய நாளை நிர்ணயிப்பது ஆகியவை குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 3ம் தேதி, வத்திக்கானில் கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் கலந்தாலோசித்தார். அக்கூட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அருளாளர் தேவசகாயம் அவர்களை புனிதராக அதிகாரப்பூர்வமாகப் அறிவிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமையை அங்கீகரிக்கும் ஆவணத்தில், 2020ம் ஆண்டு, பிப்ரவரி 20ம் தேதியன்று கையெழுத்திட்டுள்ளார். மறைசாட்சியான தேவசகாயம் அவர்கள், இந்தியாவின் இன்றைய கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில், 1712ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி, பாரம்பரிய இந்துமத நாயர் குலத்தில் பிறந்தவர். நீலகண்ட பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், டச்சு நாட்டுப் படைத்தலைவரான, கத்தோலிக்க மதத்தை சார்ந்த Benedictus De Lennoy என்பவரின் போதனையால் கத்தோலிக்கத்தைத் தழுவினார். தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சிசெய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், 1752ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் தேதி, ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில், அருளாளர் தேவசகாயம் அவர்கள், மறைசாட்சியாகச் சுட்டுக்கொல்லப்பட்டார். கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி முனைவர் எல்பின்ஸ்டன் அவர்கள், அருளாளர் தேவசகாயம் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக புனிதர் பட்டம் வழங்குவது குறித்த நடவடிக்கைகளுக்கு, வேண்டுகையாளராகப் பணியாற்றி வருகிறார்.

அருளாளர் தேவசகாயம் அவர்களை புனிதராக

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2021, 13:45