காஸாப் பகுதியில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளான பாலஸ்தீனிய இல்லம் காஸாப் பகுதியில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளான பாலஸ்தீனிய இல்லம் 

புனித பூமியின் காஸாப் பகுதி மக்களுக்கு நிதி உதவிசெய்ய...

காஸாப் பகுதி மக்களுக்கு உதவிசெய்யும்வண்ணம், புனித பூமியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், மே 30, வருகிற ஞாயிறன்று, சிறப்பு காணிக்கைகள் திரட்டப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஸ்ரேல் அரசின் வான்வழித் தாக்குதல்களால், புனித பூமியில், பெரும் அழிவுக்குள்ளான காஸாப் பகுதி மக்களுக்கு உதவிசெய்யும்வண்ணம், புனித பூமியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், மே 30, வருகிற ஞாயிறன்று, சிறப்பு காணிக்கைகள் திரட்டப்படுமாறு, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, பேராயர் பியர்பத்திஸ்தா பித்ஸபல்லா (Pierbattista Pizzaballa) அவர்கள், சிறப்பு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

கடந்த 11 நாள்களாக நடைபெற்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர்கள், சகோதரிகளுக்கு, குறிப்பாக, காஸாப் பகுதியில் வாழும் மக்களுக்கு, நம் அக்கறையை வெளிப்படுத்துவோம் என்று, பேராயர் பித்ஸபல்லா அவர்கள், மே 25, இச்செவ்வாயன்று, விண்ணப்பச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

மே 30ம் தேதி திரட்டப்படும் நிதி அனைத்தும், காஸாப் பகுதியில் அமைந்துள்ள திருக்குடும்ப பங்கிற்கு முழுமையாக வழங்கப்படும் என்று பேராயர் பித்ஸபல்லா அவர்கள், அறிவித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கங்களை கூடுதலாக உணர்ந்துவரும் காஸாப் பகுதி மக்கள் மீது, தற்போது இஸ்ரேல் அரசு மேற்கொண்ட தாக்குதல்கள், அவர்கள் வாழ்வை பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்று, பேராயர் பித்ஸபல்லா அவர்கள், தன் விண்ணப்பச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துள்ள நான்காவது பெரும் மோதல் இது என்றும், மே 21, கடந்த வெள்ளியன்று நிறுத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் இதுவரை, 66 குழந்தைகள் உட்பட, 243 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், ஊடகங்கள் கூறியுள்ளன.

20 இலட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வாழும் காஸாப் பகுதியில், 1,100 கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2021, 14:22