1521ம் ஆண்டு, மே 20ம் தேதி, பாம்பலோனா கோட்டை போரில் காயமடைந்த, இளம் வீரர் இக்னேசியஸ் 1521ம் ஆண்டு, மே 20ம் தேதி, பாம்பலோனா கோட்டை போரில் காயமடைந்த, இளம் வீரர் இக்னேசியஸ் 

"இக்னேசியஸ் 500" சிறப்பு ஆண்டு - கருத்தரங்குடன் துவக்கம்

உலகெங்கும் வாழும் இயேசுசபையினர், "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டை துவக்கும் வேளையில், உரோம் நகரில், கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின், ஆன்மீகத்துறை, சிறப்புக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் வாழும் இயேசுசபையினர், மே 20, இவ்வியாழனன்று, "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டை துவக்கும் வேளையில், உரோம் நகரில், இயேசு சபையினர் நடத்திவரும் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின், ஆன்மீகத்துறை சிறப்புக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

"கிறிஸ்துவில் அனைத்தையும் புதிதாகக் கண்டுகொள்ள" என்ற தலைப்பில் நிகழும் இந்த ஒருநாள் கருத்தரங்கு, கிரகோரியன் பல்கலைக்கழகத்தின் தலைவர், அருள்பணி Nuno da Silva Goncalves அவர்கள் வழங்கும் வரவேற்புரையுடன் துவங்குகிறது.

இதைத் தொடர்ந்து, இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள ஆன்மீகத் துறைத் தலைவர், அருள்பணி பவுல்ராஜ் மைக்கில் அவர்கள், இந்த ஒருநாள் கருத்தரங்கைக் குறித்த விவரங்களை வழங்குகிறார்.

இக்கருத்தரங்கின் முதல் பேச்சாளராக, இயேசு சபையின் அகில உலகத்தலைவர் அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள், இக்னேசியஸ் ஆண்டு வழங்கும் வாய்ப்புக்கள் என்ற தலைப்பிலும், அவரைத் தொடர்ந்து, உரோம் இல்லங்களில் வாழும் இயேசு சபையினரின் பொறுப்பாளர், அருள்பணி Johan Vershueren அவர்கள், இக்னேசியஸ் ஆண்டின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும், உரைகள் வழங்குகின்றனர்.

திருப்பீட விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் Luis Francisco Ladaria Ferrer அவர்கள், இக்னேசியஸ் அடைந்த மனமாற்றம் மற்றும் உள்ளார்ந்த போராட்டம் என்ற தலைப்பிலும், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் Marcello Semeraro அவர்கள், கடவுளின் இருப்பை அனைத்திலும் காண்பதன் வழியே புனிதமடைதல் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றுகின்றனர்.

1521ம் ஆண்டு, பாம்பலோனா கோட்டையைக் காக்க, இளம் வீரர் இக்னேசியஸ், போரில் ஈடுபட்டிருந்த வேளையில், மே 20ம் தேதி, அவரது காலை பீரங்கி குண்டு தாக்கியது. அந்நிகழ்வு, இக்னேசியஸ் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்ததால், அந்நிகழ்வின் 500ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுகிறது.

மே 20ம் தேதி வியாழனன்று துவங்கும் "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டு, 14 மாதங்கள் நடைபெற்று, 2022ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி, புனித இக்னேசியஸ் திருநாளன்று நிறைவு பெறும்.

மே 23, பெந்தக்கோஸ்து ஞாயிறன்று, இணையத்தளம் வழியே, உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும், இயேசு சபையினரும், உடன் உழைப்பாளர்களும் கலந்துகொள்ளும் ஒரு செப நிகழ்வுடன் "இக்னேசியஸ் 500" சிறப்பு ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் துவங்கும் என்று, இந்த சிறப்பு ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் இயேசு சபை இளவல், Pascal Calu அவர்கள் கூறியுள்ளார்.

இச்சிறப்பு ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, 2022ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, இக்னேசியஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் ஆகிய இருபெரும் இயேசு சபையினர், புனிதர்களாக உயர்த்தப்பட்டதன் 400ம் ஆண்டு நினைவு சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2021, 14:38