அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. 

அருள்பணி சுவாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை வெகு விரைவில் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பல்வேறு நலவாழ்வுப் பிரச்சனைகளால் மும்பை டலோஜா சிறையில் துன்புற்றுவரும், 84 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், மும்பையில், திருக்குடும்ப மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு, நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என்று, உரோம் உலகளாவிய இயேசு சபை தலைமையகம் கூறியுள்ளது.

விடுமுறை முடிந்து மும்பை உயர் நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும்போது, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் விண்ணப்பித்திருந்த பிணையல் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இயேசு சபை தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை வெகு விரைவில் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ள பெங்களூரு இந்திய சமுதாய நிறுவனத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்பணி ஜோ சேவியர் அவர்கள், இந்நடவடிக்கை, மே 28, இவ்வெள்ளிக்கிழமைக்குள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதியிலிருந்து சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தான் சிறைக்கு வந்தவேளையில் ஓரளவு நல்ல உடல்நலத்துடன் இருந்த்தாகவும், சிறை வாழ்வில் தனது, உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றதென்றும், இதனால் தனக்கு பிணையல் வழங்கப்படவேண்டுமென்றும், கடந்த வாரத்தில், மும்பை உயர்நீதி மன்றத்தில், இணையம்வழியாக நடைபெற்ற விசாரணையில் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அச்சமயத்தில், நீதிமன்றம், அவருக்கு பிணையல் வழங்குவதை மறுத்ததோடு,  மும்பையில், JJ அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க முன்வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், அந்த அரசு மருத்துவமனையில் மூன்று முறை தான் அனுமதிக்கப்பட்டதால், அங்குள்ள நிலைமை தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தனது உடல்நிலை மோசமடைந்து வந்தாலும் பரவாயில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைவிட, சிறையிலேயே இறப்பது மேல் என்றும்  தெரிவித்தார். (Ind.Sec/tamil

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2021, 14:56