இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்று கூறினார். மாற்கு 16:15 இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்று கூறினார். மாற்கு 16:15 

விண்ணேற்றப் பெருவிழா: ஞாயிறு சிந்தனை

வார்த்தைகள் ஏதும் கூறாமல், நற்செய்தியை, தங்கள் வாழ்வாக மாறியுள்ள உன்னத உள்ளங்கள், இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், நமது மத்தியில் உலவி வருவதற்காக, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

விண்ணேற்றப் பெருவிழா: ஞாயிறு சிந்தனை

எழுத்தாளரும், பேச்சாளருமான ரெபெக்கா பிப்பெர்ட் (Rebecca Pippert) என்ற பெண்மணி, ஒருநாள், தன் காரில், அலுவலகம் சென்றுகொண்டிருந்தார். போகும்வழியில், நான்கு வழி சந்திப்பு ஒன்றில், சிவப்பு விளக்கு மாறுவதற்காகக் காத்திருந்தார். தென்றல், மென்மையாக வீசிக்கொண்டிருந்ததால், ரெபெக்கா, தன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டிருந்தார். அப்போது, அருகில் ஒரு கார் வந்துநின்றது. போக்குவரத்து விளக்கு, சிவப்பிலிருந்து பச்சையாக மாறிய அத்தருணத்தில், அருகில் வந்துநின்ற காரிலிருந்து, ரெபெக்காவை நோக்கி ஏதோ ஒரு பொருளை எறிந்துவிட்டு, அந்தக் காரில் இருந்தவர்கள் பறந்துசென்றனர். அவர்கள் எறிந்த பொருள், ரெபெக்காவின் முகத்தை உரசி, மடியில் விழுந்தது. அதிர்ந்துபோன ரெபெக்கா, காரை நிறுத்திவிட்டு, மடியில் விழுந்த பொருள் என்னவென்று பார்த்தார். நற்செய்தி எண்ணங்கள் அடங்கிய ஒரு சிறு நூல் அது.

மடியில் விழுந்தது, நற்செய்தி எண்ணங்கள் என்பது, ரெபெக்காவிற்கு மிகிழ்வைத் தந்தது. அந்நூலை எறிந்தவர்கள் நல்ல எண்ணத்துடன்தான் செயல்பட்டிருக்கவேண்டும் என்பதையும் ரெபெக்கா உணர்ந்தார். இருந்தாலும், அந்த நற்செய்தி, தன் முகத்தில் அறையும்படி தன்னை வந்து சேரவேண்டுமா என்ற கேள்வியும் அவர் மனதில் எழுந்தது. நற்செய்தியால் மற்றவர்களைத் ‘தாக்கும்’ இத்தகையப் பாணியை, “Torpedo Evangelism” அதாவது, "தாக்குதல் வழி, நற்செய்தியைப் பரப்புதல்" என்று, ரெபெக்கா பிப்பெர்ட், தான் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" (மத். 5:13) என்று இயேசு கூறிய சொற்களை அடிப்படையாகக் கொண்டு, ரெபெக்கா அவர்கள் உருவாக்கிய அந்நூலின் பெயர், "உப்புக் குப்பியிலிருந்து உலகிற்கு" (Out of the Salt Shaker: Into the World). அந்நூலில், நற்செய்தியை உலகிற்கு எடுத்துச்செல்லும் வழிகளைப்பற்றி ரெபெக்கா எழுதியுள்ளார்.

ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். விண்ணேற்றத்திற்கு முன்னதாக தன் சீடர்களை இறுதிமுறையாகச் சந்தித்த இயேசு, அவர்களிடம் விட்டுச்சென்ற செய்தி, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது:

மாற்கு நற்செய்தி 16: 15-18

அக்காலத்தில், இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

“நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று இயேசு கூறிய சொற்கள், மறைப்பணி ஆர்வலர்களால் பலவழிகளில் பொருள் கொள்ளப்பட்டுள்ளதால், நன்மைகள் விளைந்துள்ளன; பிரச்சனைகளும் எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, கோவிட் பெருந்தொற்றின் முதல் அலையும், தற்போது, இரண்டாவது அலையும் நம்மை பெரிதும் காயப்படுத்தியுள்ள வேளையில், "இது, கடவுள் அனுப்பிய தண்டனை. எனவே, மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்" என்று, வீதி ஓரங்களில் நின்று முழங்கும் போதகர்களை நாம் பார்த்திருக்கலாம். இந்தப் போதகர்களால், நன்மைகள் விளைந்ததைவிட, பிரச்சனைகளே அதிகம் விளைந்துள்ளன. இத்தகைய அச்சுறுத்தும் செய்திகள், 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு தந்த கட்டளையை, தவறாகப் புரிந்துகொண்ட ஆர்வக்கோளாறு என்றுதான் சொல்லவேண்டும்.

நற்செய்தியை யார் பறைசாற்றுவது? அதை எப்படி பறைசாற்றுவது? என்ற கேள்விகள் கிறிஸ்தவ வரலாற்றில் அடிக்கடி எழுந்துள்ளன. பொதுவாக, நற்செய்தியைப்  பறைசாற்றுதல் என்று சொன்னதும், கோவில்களில் முழங்கும் சக்திவாய்ந்த மறையுரைகளை எண்ணிப்பார்க்கிறோம். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, அருள்பணியாளர்கள், துறவியர், என்ற ஒரு குறுகிய குழுவுக்கு, இந்தப் பணியை ஒதுக்கி வைத்துவிடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில், இயேசு, தம் சீடர்களுக்குக் கொடுத்த கட்டளையை ஆழமாக சிந்திக்கும்போது, இக்கட்டளையில் பொதிந்துள்ள இன்னும் சில அழகான எண்ணஙகளைப் புரிந்துகொள்ளலாம். 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறிய அதே மூச்சில், அந்தப் பறைசாற்றுதலினால் விளையும் பல்வேறு நன்மைகளையும் கூறுகின்றார். நற்செய்தியில் நம்பிக்கை கொண்டவர்கள், பேய்களை ஓட்டுவர், உடல்நலமற்றோரைக் குணமாக்குவர், பாம்போ, கொடிய நஞ்சோ அவர்கள் உயிரைப் பறிக்காது என்ற அடையாளங்களை, இயேசு, இணைத்துக் கூறுகிறார்.

கோவில்களில் முழங்கப்படுவதோடு நற்செய்தியின் பறைசாற்றுதல் நின்று விடுவதில்லை. ஒவ்வொரு நாள் வாழ்விலும் வெளிப்படும் குணமளிக்கும் பணிகளில், தீயசக்திகளை உலகினின்று விரட்டியடிக்கும் பணிகளில், இந்தப் பறைசாற்றுதல் நிகழவேண்டும் என்பதை, இயேசு தெளிவுபடுத்துகிறார்.

இந்தக்கோணத்திலிருந்து பார்த்தால், கோவிட் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க போராடிவரும், மருத்துவப் பணியாளர்களும், இந்தப் பெருந்தொற்றின் விளைவாக, வாழ்வின் ஆதாரங்களை இழந்து தவிப்போருக்கு உதவிகள் செய்வோரும், பெருந்தொற்று என்ற பேயை ஓட்டி, நோயை நீக்கி, இன்றையச் சூழலுக்கு அவசியமான நற்செய்தியைப் பறைசாற்றிவருகின்றனர், அல்லது, நற்செய்தியாகவே வாழ்ந்துவருகின்றனர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

வார்த்தை வடிவில் ஆலயங்களில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்தி, இன்னும் நீடித்த, ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், மருத்துவர் Albert Schweitzer அவர்களும் ஒருவர். இவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு, நற்செய்தியைப் பறைசாற்றுதல் என்பதை, இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

மருத்துவர் ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்காவில் மேற்கொண்ட மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகளும், ஆயுதங்களும் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை வளர்க்க, அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், 1952ம் ஆண்டு, உலக அமைதிக்கான நொபெல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற அடுத்த ஆண்டு, அவர், அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் சென்றார். அவரை வரவேற்க, பத்திரிக்கையாளர்கள், பெரும் தலைவர்கள் என்று, பலர், அவர் வரவிருந்த இரயில் நடைமேடையில் காத்திருந்தனர். ஆல்பர்ட் அவர்கள், இரயிலை விட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. அவரோ, அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல், தன்னை சிறிதுநேரம் மன்னிக்கவேண்டும் என்று வேண்டியபடி, அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு  சென்றார். அந்த நடைமேடையில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துக்கொண்டிருந்த வயதான கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார். பின்னர், தனக்காகக் காத்திருந்த கூட்டத்தினரைச் சந்திக்க வந்தார் ஆல்பர்ட். இதைக்கண்ட ஒரு பத்திரிகையாளர், மற்றொருவரிடம், "நான், இதுவரை, கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்க்கிறேன்" என்று கூறினார். இந்நிகழ்வு நடந்தவேளையில், மருத்துவர் ஆல்பர்ட் அவர்களது வயது, 78.

ஆல்பர்ட் அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில் தன்னிகரற்ற புகழ்பெற்றிருந்தார். ஆனால், தனது 30வது வயதில், அவர் மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவமனையொன்றை நிறுவி, பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று, அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு, பல ஆண்டுகள், மருத்துவப்பணிகளைப் செய்துவந்தார்.

இளமையில், தன் வார்த்தைகள் வழியே, நற்செய்தியைப் பறைசாற்றி, புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில், நற்செய்தியை தன் வாழ்வின் வழியே பறைசாற்றினார். ஆல்பர்ட் போன்ற நற்செய்திப் பணியாளர்களின் பறைசாற்றுதலே, இவ்வுலகில், நற்செய்தியை, இருபது நூற்றாண்டுகளாய் அதிகமாய், ஆழமாய், வேரூன்றி வளரச்செய்துள்ளது என்று சொன்னால், அது, முற்றிலும் உண்மை.

வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு, பெரும் அறிவாளிகள், பேச்சாளர்கள் தேவையில்லை. இயேசுவின் சீடர்களே, இதற்கு, சிறந்த எடுத்துக்காட்டுகள். இயேசு விண்ணேற்றம் அடைந்ததும் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு கற்பனைக் கதை இது.

இயேசு விண்ணகம் சென்றதும், தலைமைத்தூதர் கபிரியேல் அவரைச் சந்தித்தார். "உலகில் உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உங்கள் நற்செய்தியை, உலகில் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள் வகுத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.

"என்னுடையப் பணியைத் தொடரும்படி, ஒரு சில மீனவர்களிடமும், வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப் பேதுரு, தோமா இவர்களைப்பற்றிச் சொல்கிறீர்களா? அவர்களைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத் தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்தப் பணியை ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் இருக்கும், அப்படித்தானே?" என்று கேட்டார்.

இயேசு வானதூதரிடம் அமைதியாக, "நற்செய்திப் பணியை இவர்களை நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று பதிலளித்தார்.

இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும் இவ்வுலகில் நடமாடி வருகிறது என்றால், இன்றும் அச்செய்தி, பொருள் நிறைந்ததாக உள்ளது என்றால், அதற்குக் காரணம், நற்செய்தியை, தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை கொண்டு போதித்தவர்களோ, அவர்கள் பயன்படுத்திய வழிகளோ அல்ல... நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.

இயேசு, மற்றும், அவர் தந்த நற்செய்தி என்ற மையங்களிலிருந்து விலகி, நற்செய்தியைப் போதிப்பவரின் புகழ், அவர் மேற்கொள்ளும் வழிகள் என்று, எப்போதெல்லாம் நமது சிந்தனைகள் தடம்புரண்டனவோ, அப்போதெல்லாம், பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை, கிறிஸ்தவ வரலாறு, மீண்டும் மீண்டும், நமக்குச் சொல்லித்தந்துள்ளது.

வார்த்தைகள் ஏதும் கூறாமல், நற்செய்தியை, தங்கள் வாழ்வாக மாறியுள்ள உன்னத உள்ளங்கள், இந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், நமது மத்தியில் உலவி வருவதற்காக, இறைவனுக்கு நன்றி சொல்வோம். இந்த நற்செய்திகள் நம்மிடையே வாழும்போது, நஞ்சாகப் பரவிவரும் தீயசக்திகள், நம்மை அழித்துவிடமுடியாது என்பதை, மனதார நம்புவோம்.

இறுதியாக, சிறப்பான ஓர் இறைவேண்டலைக் குறித்த தகவலோடு, நம் சிந்தனைகளை இன்று நிறைவுசெய்வோம். மனித சமுதாயத்தை, குறிப்பாக, இந்திய சமுதாயத்தை, பெருமளவு வதைத்துவரும் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க, இந்தியத் திருஅவை, மே 15, இச்சனிக்கிழமை காலை 6 மணி முதல், மே 16, ஞாயிறு காலை 6 மணி முடிய, 24 மணிநேர தொடர் ஆராதனைகளையும், திருப்பலிகளையும் ஒப்புக்கொடுக்கின்றது. இறக்கும் நிலையிலிருந்த தன் மகளைக் காக்க வரும்படி வேண்டி அழைத்த, தொழுகைக்கூடத் தலைவர் யாயிரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” (மாற்கு 5:36) என்று இயேசு கூறிய சொற்களை மையக்கருத்தாகக் கொண்டு, இந்த தொடர் ஆராதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மே 15, இச்சனிக்கிழமை காலை 6 மணிக்கு, மும்பைப் பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியோடு துவங்கிய இம்முயற்சி, ஞாயிறு காலை 6 மணிக்கு, சென்னை மயிலைப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியோடு நிறைவுபெறுகிறது. இந்த இறைவேண்டல் தொடர் முயற்சியில், இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்கள், ஒவ்வொரு மணி நேரமும் பொறுப்பேற்று நடத்துகின்றன. அத்துடன், இலங்கையின் மடு மாதா திருத்தலம், உட்பட, பல்வேறு நாடுகளிலுள்ள ஆலயங்களும் பங்கேற்கின்றன. இந்த 24 மணி நேர தொடர் ஆராதனை முயற்சியில் நாமும் கலந்துகொண்டு, கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து, இந்திய மக்களையும், இவ்வுலக மக்களையும் காக்க, இறைவனை மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2021, 15:19