குண்டுவீச்சுக்கு உள்ளான கோவிலின் உள்புறம் குண்டுவீச்சுக்கு உள்ளான கோவிலின் உள்புறம்  

மியான்மார் கோவில் தாக்கப்பட்டதற்கு கர்தினால் கண்டனம்

கர்தினால் போ : அப்பாவி மக்கள், காடுகளுக்குள் அடைக்கலம் தேடியுள்ளதால், உணவுப்பொருட்களையும், மருந்துக்களையும் விநியோகிப்பது, சிரமமாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே மாதம் 23-24, ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடைப்பட்ட இரவில், மியான்மாரின் Kayah மாநிலத்திலுள்ள திருஇருதய கோவில் தாக்கப்பட்டு, அதில் அடைக்கலம் தேடியிருந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளது, மற்றும் படுகாயமுற்றுள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ.

அரசு துருப்புக்களின் தாக்குதலுக்குப் பயந்து 300க்கும் மேற்பட்ட மக்கள், குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் அடைக்கலம் தேடியிருந்த திரு இருதய கத்தோலிக்க ஆலயத்தின் மீது இராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில், கோவில் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், 4 பேர் உயிரிழந்து, 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளது குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட கர்தினால் போ அவர்கள், மோதல்களின்போது, கோவில்களும், மருத்துவமனைகளும், கல்வி நிலையங்களும், தாக்கப்படக்கூடாது என்ற அனைத்துலக விதிகளை மீறி, இந்த கொடுஞ்செயல் இடம்பெற்றுள்ளதாக கவலையை வெளியிட்டார்.

Kayah மாநிலத்தின் தலைநகருக்கு அருகேயுள்ள Kayanthayar பங்குத்தள மக்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் தாக்குதல்களின் அச்சத்தால், கோவில்களிலும், துறவுமடங்களிலும், திருஅவை கட்டிடங்களிலும் அடைக்கலம் தேடியிருக்க, இராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதல்கள் இந்த கட்டடங்களையும் விட்டுவைக்கவில்லை என, ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், கர்தினால் போ.

தற்போது மதக்கட்டடங்களும் பாதுகாப்பற்றவை என்பதை நேரடியாகக் கண்டுள்ள அப்பாவி மக்கள், காடுகளுக்குள் புகுந்து, அடைக்கலம் தேடியுள்ளதால், அவர்களுக்கு உணப்பொருட்களையும் மருந்துக்களையும் விநியோகிப்பது, மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்த கர்தினால் போ அவர்கள், அண்மைய மோதல்களால், நூற்றுக்கணக்கானோர் இறந்தும், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்தவர்களாகவும் மாறியுள்ள நிலையில்,  மாநிலத் தலைநகர் Loikawவில் மட்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கோவிட் பெருந்தொற்றால் துயர்களையும், பட்டினிச்சாவுகளையும் அனுபவித்துவரும் மியான்மார் மக்கள்மீது, இராணுவம் தாக்குதலை மேற்கொள்வது, கொடுமையானது எனக்கூறும் கர்தினால் போ அவர்கள், தற்போது, இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் எதிரிகளல்ல, மாறாக, மியான்மார் நாட்டின் குடிமக்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, கத்தோலிக்க கோவில் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள மியான்மார் இயேசு சபையினர், மக்கள் மீது கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இராணுவம், நீதியின் முன் கொணரப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சனநாயக அரசை, இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதி இராணுவம் கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, தங்கள் எதிர்ப்பைக் காட்டிவரும் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது, மியான்மார் இராணுவ அரசு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2021, 13:54