தேடுதல்

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், அந்தோணி அனந்தராயர் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், அந்தோணி அனந்தராயர் 

இறையடி சேர்ந்த பேராயர் அந்தோணி அனந்தராயர், நல்லடக்கம்

கோவிட்-19 பெருந்தொற்றினால் உருவான நலக்குறைவை முன்னிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராயர் அனந்தராயர் அவர்கள், மே 4ம் தேதி, இரவு 9.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புதுவை-கடலூர் (புதுச்சேரி-கடலூர்) உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், அந்தோணி அனந்தராயர் அவர்கள், மே 4, இச்செவ்வாயனறு, தன் 76வது வயதில் இறையடி சேர்ந்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் உருவான நலக்குறைவை முன்னிட்டு, சென்னை, புனித தோமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராயர் அனந்தராயர் அவர்கள், இச்செவ்வாய் இரவு, 9.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

பேராயர், அந்தோணி அனந்தராயர் – வாழ்க்கை குறிப்புகள்

1945ம் ஆண்டு, ஜூலை 18ம் தேதி, கும்பகோணத்திற்கு அருகே உள்ள வரதராஜன்பேட்டையில் பிறந்த அனந்தராயர் அவர்கள், பெங்களூரு புனித பேதுரு அருள்பணித்துவ பயிற்சி மையத்தில் மெய்யியல் மற்றும் இறையியலைக் கற்று, 1971ம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு  பெற்றார்.

1997ம் ஆண்டு, தன் 52வது வயதில், உதகை மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்ற அருள்பணி அனந்தராயர் அவர்கள், அம்மறைமாவட்டத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

2004ம் ஆண்டு, புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட அனந்தராயர் அவர்கள், 17 ஆண்டுகள் பணியாற்றியபின், பணிஓய்வு பெறவிழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, சனவரி மாதம் 27ம் தேதி ஏற்றுக்கொண்டார்.

50 ஆண்டுகள், அருள்பணியாளராக... 24 ஆண்டுகள், ஆயராக...

50 ஆண்டுகள், அருள்பணித்துவ வாழ்வையும், 24 ஆண்டுகள் ஆயர்பணித்துவ வாழ்வையும் நிறைவு செய்துள்ள பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவையின் பணிக்குழுக்களில் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்களின் அடக்கத் திருப்பலி, மே 5, புதனன்று மாலை 4 மணிக்கு, புதுவை அமல அன்னை பேராலயத்தில், கோவிட் பெருந்தொற்று உருவாக்கியுள்ள கட்டுப்பாடுகளுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2021, 16:00